நாட்டு நலனா? பத்திரிகை விற்பனையா? ஒருசில தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற செயல்

Tuesday, 25 January 2011

ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என புத்திஜீவிகளும், பொதுமக்களும் கூட்டாக கோரிக்கை
இனியாவது தமிழ் ஊடகங்கள் நாட்டு நலன் கருதி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற கருத்து பொதுவாக இப்போது வலுப்பெற்று வருகிறது. இக்கருத்தானது தாய்நாட்டை நேசிக்கும் அரசியல் தலைவர்களிடமிருந்து மட்டுமல்லாது புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் எழுந்துள்ளது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம். இதுவரை காலமும் இந்த ஒருசில தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் தமிழ்ச் சமூகம் அழிவை மட்டுமே கண்டு வந்துள்ளது. இனியும் அது தேவையா?
முப்பது வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தால் கட்டுண்டு கிடந்த நாடு இப்போது அதிலிருந்து முற்றாக விடுபட்டுச் சமாதானச் சூழலில் பயணித்து வருகின்றது. இதனைச் சீர் குலைக்கும் வகையில் ஒருசில தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன. இது கவலைதரும் விடயம் என்பதுடன், அது தடுத்து நிறுத்தப்படவும் வேண்டும்.

புலிகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இந்த ஒருசில தமிழ் ஊடகங்கள் அவற்றுக்குச் சார்பாக செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்களின் மனங்களில் இடத்தைப் பெற்றன. தமிழ் மக்களின் உணர்வுகளை அளவுக்கு மீறி எடுத்தியம்பியதனால் தமிழ் ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்றது. இதற்கு அன்றைய சில தமிழ் அரசியல்வாதிகளும் காரணமாக இருந்துள்ளனர்.

ஒருவேளை அன்றைய காலகட்டத்தில் இவர்களது சிந்தனைகள், செயற்பாடுகள் சரியானதாகக் கூடத் தோன்றியிருக்கலாம். ஏனெனில், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் அவ்வாறு ஒரு நல்ல நோக்கத்தில்தான் சாத்வீகப் போராட்டமாக அன்று ஆம்பிக்கப்பட்டது. ஆனால் என்று அது ஆயுதப் போராட்டமாக மாறியதோ அன்றுமுதல் அது பயங்கரவாதமாக மாறியது.

பயங்கர ஆயுதங்கள் தமிழ் இளைஞர்களின் கைகளில் தாராளமாகப் புளங்கியதால் அவர்கள் சிங்கள அரசாங்கங்களைச் சார்ந்தவர்களையும் கொன்று, தமக்குள்ளும் கொலைகளைச் சர்வசாதாரணமாகப் புரிந்து வந்தனர். அப்போதும் இந்த ஒருசில ஊடகங்கள் இவர்களைப் புகழ்ந்துதான் எழுதின. இதற்குப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் ஒரு பயமாகக் காணப்பட்டாலும், அந்த ஒருசில தமிழ் ஊடகங்கள் தமது வளர்ச்சிக்காகவும் இதனைச் செய்து வந்தன. அவை நாட்டு நலனை விடவும் நமது நலனையே பெரிதாக எண்ணிச் செயற்பட்டன.
அரசியல்வாதியோ அல்லது எதுவுமே அறியாத அப்பாவிப் பொதுமகனோ இந்தக் கொடிய யுத்தத்தினால் கொல்லப்பட்டபோதும் அது தவறு, இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என இந்த ஒரு சில தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லை. மாறாக தமது பத்திரிகைகளின் விற்பனைக்காக செய்திகளைத் திரித்துத் திரித்து எழுதி வந்தன.

அன்று ஒருசில அரசியல்வாதிகள் யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறுவதை மறைமுகமாக விரும்பினார்கள். இதற்குக் காரணம், அவர்கள் இந்த யுத்தத்தை வைத்துத்தான் தமது அரசியலை நடத்தி வந்தனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் அவர்களுக்கு மக்களிடையே உறுதிமொழி அளித்து உரையாற்ற எந்த விடயமும் இல்லை. அத்துடன் ஒருசிலர் இந்த யுத்தம் மூலமாக வருமானத்தையும் பெற்று வந்தனர்.

இந்த வரிசையில் இதே நோக்கத்தில்தான் இந்த ஒருசில தமிழ் பத்திரிகைகளும் இயங்கி வந்துள்ளன. தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாக வெளிக்காட்டிக் கொண்டு தமது பத்திரிகைகளின் விற்பனையை பண்மடங்கு அதிகரித்து வந்தன. தமிழ் மக்கள் உட்பட இந்நாட்டு குடிமக்களான இராணுவ வீரர்களும் கொல்லப்படுவது இந்தக் கொடிய யுத்தத்தால்தான் என்று இவர்கள் கருதுவதில்லை. மாறாக தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கொட்டை எழுத்தில் செய்திகளைப் போட்டுக் கொண்டு வந்தால் அதிகமாகப் பத்திரிகையை விற்கலாம் என்பதே இவர்களது நோக்கமாக இருந்தது.

உண்மையிலேயே இந்த ஒருசில தமிழ் ஊடகங்கள் தமது மக்களுக்குக் குரல் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு கொலைகளையும், பலியெடுப்புகளையும் ரசித்துக் கொண்டே தமது விற்பனை அதிகரிப்பு இலக்கை அடைந்துள்ளன. என்றாவது இவை புலிகளோ அல்லது ஏனைய தமிழ் இயக்கங்களோ செய்த பல பாரிய தவறுகளில் ஒன்றையாவது சுட்டிக்காட்டியுள்ளனவா? அல்லது இந்த கொடிய யுத்தம் காரணமாகவே அப்பாவிப் பொதுமக்களும் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறும் கருத்துப்பட செய்திகளை வெளியிட்டதுண்டா? இல்லை.

இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மூலமாக கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் உட்பட நாட்டு மக்கள் நிம்மதியாக வாழத் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்று புலிகள் பற்றிச் செய்தி வெளியிட இந்த ஒருசில பத்திரிகைகளிடம் செய்தி எதுவும் இல்லை. யுத்தம், கொலை, குண்டு வெடிப்பு, கண்ணிவெடி, நூறு இராணுவம் பலி, ஆயிரம் அப்பாவி தமிழ் பொதுமக்கள் பலி, கபீர் விமானம் குண்டு வீசி நூறு பேர் பலி, சிறுவர் உட்பட பத்துப் பேர் பலி, கர்ப்பிணிப் பெண் துப்பாக்கிச் சூட்டில் பலி என்று மக்களைக் கவரும் வகையில் செய்திகள் வெளியிட முடியாது திக்குமுக்காடியுள்ளனர்.

இதற்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது. இது நல்லதா அல்லது தினமும் மேலே குறிப்பிட்டவாறு செய்திகள் வெளிவருவது நல்லதா? இந்த ஒரு சில பத்திரிகைகள் இவ்வாறான செய்திகளைப் பிரசுரித்து தமது இலக்கை அடைவதற்காக நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்க இனியும் முயற்சிக்குமா எனும் கேள்வியும் எழுகின்றது.

தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் என்றால் ஏன் சிங்களப் பத்திரிகைகள் சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடாது. சிங்கள ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இனவாதத்தைக் கக்குவதாக இருக்கிறது. என்று பல தமிழ் ஊடகங்கள் கொதித்தெழுந்து செய்திகளை முன்னர் வெளியிட்டன. அவ்வாறாயின் அவ்வாறு அன்று முதல் இன்றுவரை எழுதும் தமிழ் ஊடகங்களும் ஒருவகையில் இனவாதத்தைத் தானே வெளியிடுகின்றன?

இந்தக் கட்டுரை யாருக்கும் வக்காளத்து வாங்குவதற்காக எழுதப்படவில்லை. அங்கு சிங்கள இனவாதம் என்றால், இங்கு தமிழ் இனவாதம். ஆகவே ஒருவகையில் இரண்டுமே இனவாதம்தான். இந்நிலை மாற வேண்டும். இன்று சிங்கள ஊடகங்கள் இனவாதத்தைப் பெரிதாகக் கக்குவதில்லை. ஒருசில தமிழ் ஊடகங்கள் போன்று அவ்வாறு இனவாதத்தைக் கக்கி விற்பனையில் சாதனை புரியவும் இல்லை. செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது விற்பனையை அதிகரிக்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு அழிவுகளையும் சந்தித்த தமிழ்ச் சமூகம் இன்னமும் அழிவை நோக்கிய பயணத்தைத் தொடரவா இதுபோன்ற செய்திகளுக்கு அந்தச் சில ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இவ்வளவு காலமும் இந்த ஒருகில தமிழ் ஊடகங்கள் போட்ட வீர வசன செய்திகள், சோடிக்கப்பட்ட செய்திகள், வேண்டுமென்றே மழுங்கடிக்கப்பட்ட செய்திகளால் கண்ட பலன்தான் என்ன? தமிbழத்தைக் கண்டு விட்டார்களா? தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? இல்லை. மாறாக உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து உணர்வுகளையும் இழந்து சொந்த வீடுகளின் எல்லைகள் கூடத் தெரியாத அளவிற்கு அழிவுக்குள்ளானதுதான் மிச்சம்.

இன்று இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர்தான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் நிலை உருவாகியுள்ளது. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. யுத்தம் முடிவுக்கு வந்ததால் பாதிக்கப்பட்டது, அந்த இனவாதமாக எழுதும் தமிழ் ஊடகங்கள்தான். ஆனாலும் அவை இனியும் தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவதாக இல்லை. அதுதான் இன்று எம்முன்னாலுள்ள பாரிய பிரச்சினையாகும்.

ஆயுத யுத்தத்தில் இலகுவான வெற்றி கண்டு தமிழ் மக்களை நிம்மதியாக வாழ வைத்துள்ள அரசாங்கம் இந்த ஒருசில தமிழ் ஊடகங்களின் மாயப் பிடியிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும். யுத்தம் பற்றிய செய்தி இன்மையால் இந்த ஒருசில பத்திரிகைகள் அமைதியாக அபிவிருத்திப் பாதையில் அரசுடன் இணைந்து பயணித்துவரும் தமிழ் மக்களைச் சீண்டித் தமது அந்த இலக்கை அடைய மீண்டும் முனைந்துள்ளது இதிலிருந்து மக்களை அரசாங்கமே பாதுகாக்க வேண்டும்.

இன்றும் தமிழ் மக்கள் ஏதோ பிரச்சினைகளில் மூழ்கியிருப்பது போலவும், அவர்கள் உரிமைகளை இழந்து தவிப்பது போலவும் செய்திகளை வெளியிட்டு வருவது மீண்டும் பாதாள குழிக்கே தமிழ் மக்களை வழிநடத்திச் செல்வதாக அமையும். முப்பது வருடமாக தமிழ் மக்கள் நிம்மதியாகவா வாழ்ந்தார்கள்? வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது அங்கு வாழ்ந்த சிங்கள மக்கள், முஸ்லிம்கள் என்போரும் சொல்லொணாத் துயரை அனுபவித்துள்ளனர்.

இந்நிலை தொடர வேண்டுமா? இதனையா இந்த ஒருசில தமிழ் ஊடகங்கள் விரும்புகின்றன. இன்று அரசாங்கத்தின் மீது வேண்டுமென்றே வசைபாடி இல்லாத ஒன்றை பூதாகரமாக்கி தமிழ் மக்கள் ஏதோ நிம்மதியிழந்து வாழ்வதாகச் சித்தரிப்பதே இந்த ஒருசில தமிழ் ஊடகங்களின் செயற்பாடாக உள்ளது. இவர்கள் தமிழ் மக்களது உரிமைக்காக என்று கூறிக்கொண்டு மீண்டும் இழந்து போயுள்ள தமது பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்க முனைகின்றனர். இதுவல்ல பத்திரிகா தர்மம். இதுவல்ல ஊடக தர்மம்.

முல்லைத்தீவில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போதும், அதை நம்பாது மூன்று வாரங்களுக்கு மேலாக அதை வைத்து எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்களைக் குழப்பி இலாபம் அடைந்ததும் இந்த ஒருசில பத்திரிகைகள்தான். இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவித்தது உண்மைதான். ஆனால் அத்துன்பம் முப்பது வருடங்களாக அவர்களது மூன்று தலைமுறை அனுபவித்ததை விட ஒன்றும் பெரிதல்ல. இன்று அவ்வாறு துன்பத்தைச் சந்தித்தவர்கள் இன்பமாக வாழ்ந்து வருகின்றார்கள். அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி வருகின்றது.

இதனை ஊக்குவித்து உண்மையை எழுத ஏன் இந்த ஒருசில ஊடகங்கள் மட்டும் தயக்கம் காட்டுகின்றன. இன்று கிளிநொச்சியும், முல்லைத்தீவும் அடைந்துள்ள பாரிய அபிவிருத்தி மாற்றத்தைப் புலிகள் அழிக்கப்படாதிருந்தால் உலகம் அழியும்வரை கண்டிருக்கு முடியாது. மின்சார விளக்குகளைக் கண்டறியாத பலர் அங்குள்ளனர். இப்போது அங்கு மின்சார இணைப்பில்லாத வீடுகளே இல்லை எனுமளவிற்கு அபிவிருத்தி கண்டு வருகிறது. இதனை இந்த ஒருசில தமிழ் ஊடகங்கள் மட்டும் ஏன் புரிந்துகொள்ளவில்லை.

புலம் பெயர்ந்த மக்கள் தமது சுயலாபத்திற்காகவே வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருகிறார்கள். அவர்களை நம்பி இந்த ஒருசில ஊடகங்கள் நடக்குமானால், அதைப்போன்ற முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இன்றைய அரசாங்கம் நினைத்திருந்தால் கடந்து வந்த அரசாங்கங்கள் செய்தது போன்று யுத்த காலத்தில் ஊடகங்களுக்கு கட்டுப்பாட்டை விதித்திருக்கலாம். ஆனால் சிறிதளவேனும் முனையவில்லை. சுதந்திரமாக செய்திகளை வெளியிட அனுமதித்தது.

அதனை இந்த ஒருசில தமிழ் ஊடகங்கள் தமக்குச் சாதகமாகப் பாவித்தன. ஆனாலும் ஊடுகச் சுதந்திரத்தின் நிமித்தம் அதனை அரசு கண்டு கொள்ளவில்லை.

எனவே எதிர்காலத்திலாவது இவர்கள் நாட்டு நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். வெறுமனே விற்பனையை அதிகரிக்கவோ, தமிழ் மக்களிடையே நல்ல பெயரைச் சம்பாதிக்கவோ முனைந்து தமது சமூகத்தைத் தாமே படுகுழிக்குள் மீண்டும் தள்ளிவிடக்கூடாது
.
- தினகரன் வாரமஞ்சரி -

1 comments:

உள்நோக்கம் கொண்டு இந்தக் கட்டுரையை 'டமில் பேப்பர்' மறுபிரசுரம் செய்துள்ளது.

Post a Comment