30 ஆண்டுகள் மக்கள் பட்ட கஸ்டம் போதும். ஊடகங்கள் மக்களை வழி நடத்த வேண்டும்

Thursday, 20 January 2011

எனக்கு முதலாவது சவாலாக அமைவது யாழ்ப்பாணத்து ஊடகங்கள் தான். 18 வருடம் வன்னியில் இருக்கும் போது எந்த விதப் பிரச்சனைக்கும் முகம் கொடுக்கவில்லை.
ஆனால் யாழ்ப்பாணம் வந்து ஆறு மாத காலத்துக்குள் பல ஊடகங்கள் என்னை விமர்சிக்கின்றன.30 ஆண்டுகள் மக்கள் பட்ட கஸ்டம் போதும். ஊடகங்கள் மக்களை வழி நடத்த வேண்டும்.என்று தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் .
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்த நல்லூர்,தெல்லிப்பழை,சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவுகளில் வசிக்கும் மீளக்குடியமர்ந்த ஐம்பது பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தால் நேற்று வழங்கப்பட்டன. இந் நிகழ்வு நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு அகதிகள் புனர் வாழ்வு கழக கேட்போர் கூடத்தில் பேராசிரியர் வி.பி.சிவநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தனது உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:
நான் வன்னியில் அரச அதிபராக கடமையாற்றிய வேளையில் யுத்தத்தின் பிடியில் மக்கள் சிக்கித் தவித்த போது அவர்களுக்குப் பல உதவிகளைச் செய்து வந்தேன். என்னை அவர்கள் வற்றாப்பளை அம்மனுக்கு அடுத்ததாக நினைத்தார்கள். நான் யுத்தத்தின் இறுதிக்கால கட்டத்தின் இரண்டு மாதங்களுக்கு முன்பு சுகயீனம் அடைந்திருந்தேன். மக்கள் எனக்கு நான்கரை லட்சம் தந்து வெளிநாட்டுக்குச் சென்று குணப்படுத்துமாறு கூறினார்கள். நான் அதைப் பெற்றுக் கொள்ளாது அரசாங்கம் எனக்கு சிகிச்சையளிக்கும் எனக் கூறனேன்.
மக்கள் தமக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் வளங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இலங்கையின் முதலாவது பெண் அரச அதிபராகப் பதவி வகிப்பது எனக்கு பெருமையளிக்கிறது. பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் எல்லாவற்றிலும் முன்னுக்கு வர வேண்டும். யாழ்ப்பாணம் கல்வி, கலாசாரம், பண்பாடு, கலை என பல விடயங்களில் முன்னனி வகிப்பதனை நினைத்துச் சந்தோசமடைகிறேன் என தெரிவித்தார் .
நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி எ.அன்ரன் யோகநாயகம், கௌரவ விருந்தினர்களாக நல்லூர் பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் வே.நிறஞ்சலா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment