5 பெண்களை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய ஜோசியர் கைது

Saturday, 12 February 2011

பெங்களூரை சேர்ந்த பிளாட்பார ஜோசியர் 100-க்கும் அதிகமான பெண்களை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.50  லட்சம் பணம், நகைகளை மோசடி செய்ததும் 5 பெண்களை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தியதும் அம்பலமானது.

பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றிய விவரம்:
பெங்களூரின் பிரதான சாலையில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருக்கும் ஜோசியர் நித்யானந்தா. சந்திரன், சுக்கிரன் என்று தனக்கு தெரிந்த வரை ஜோசியம்  சொல்லுவார். ஏழை, நடுத்தர மக்களை தனது வசீகர வார்த்தைகளால் வளைத்துப் போடுவார். மகள் திருமணம், வேலை வாய்ப்பு, தொழில் மேன்மை, புரமோஷன், எதிரி வீழ்தல் என்று பல கோரிக்கைகளுடன் வருபவர்களிடம் பரிகார பூஜை, சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று சொல்லி பணம் கறப்பார்.

கணிசமாக பணம் தேறியதும் நேராக குதிரைப் பந்தய மைதானத்துக்கு செல்வார். ரேஸில் கட்டுவார். பெரும்பாலும் அவர் நம்பும் குதிரை காலை வாரிவிடும்.  இதனால், பிளாட்பார ஜோசியமும் பணம் கறப்பும் குதிரை ரேசும் தொடர்ந்து நடந்தது. இது நித்யானந்தாவுக்கு போரடித்து விட்டதுபோல.

பெண்கள் மீது பார்வையை திருப்பினார். ஜோசியம் பார்க்க வரும் பெண்களுக்கு சேலை, நகைகளை பரிசளித்து அவர்கள் மனதில் இடம் பிடித்தார். 2001 இல் கேரள மாநிலம் காசர்கோடை சேர்ந்த கோமளா என்பவரை மணந்தார். அதன் பிறகும் பெண்களுக்கு பரிசளிப்பதை நிறுத்திவில்லை. அடுத்ததாக அவரது பேச்சில் மயங்கியவர் ஜெயலட்சுமி.

ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவரை விட்டு பிரிந்து வந்து நித்யானந்தாவிடம் கழுத்தை நீட்டினார். 2 ஆண்டு குடும்பம் நடத்திய ஜெயலட்சுமி ‘பேக் டு பெவிலியன்’. 2006 இல் ஜோசியர் வலையில் சிக்கியது மைசூர் பவித்ரா.  சில நாளிலேயே ஜோசியர் சாயம் வெளுத்தது. சொந்த ஊருக்கே போய்விட்டார் பவித்ரா.

2007 இல் மனைவியானவர் மங்களூர் வசந்தி.2009 இல் கனகமானகுடியை சேர்ந்த விஜய சரஸ்வதி என்பவர் நித்யானந்தாவிடம் ஜோசியம் பார்க்க வந்தார். ரூ.20 லட்சம், 6 பவுன் நகைகளுடன் மனதையும்  பறிகொடுத்தார். அவரை ஏமாற்றி பணத்துடன் தப்பிய ஜோசியர் நித்யானந்தா, மங்களூரில் ஷகிலா என்பவரை ஏமாற்றி மணந்தார்.

பல ஆண்டுகளாக தொடர்ந்த மோசடிகள் சமீபத்தில் அம்பலமாயின. பெண்களிடம் இருந்து புகார்கள் குவிந்தன.

நித்யானந்தாவை அதிரடியாக கைது செய்தது போலீஸ். ‘கர்நாடகா முழுவதும் 100 இக்கும் அதிகமானவர்களை ஏமாற்றியுள்ளேன். விதவிதமாக பரிசு கொடுத்தால் பெண்கள் மயங்கிவிடுவார்கள். சேலை, நகை என  கிப்ட் கொடுத்தே பலரை வளைத்தேன்’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ள ஜோசியர் நித்யானந்தாவுக்கு பெங்களூர், மங்களூரில் சொந்த வீடு உள்ளது. வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். பலரை அவர் மோசடி செய்தது தெரியாது என்று கூறி மனைவிகள் கதறினர்.

வழக்கை விசாரிக்கும் சாம்ராஜாபேட்டை போலீஸ் அதிகாரி பி.ஜி.ரத்னாகர் கூறும்போது, ‘கடந்த ஒரு மாதமாக இந்த வழக்கை விசாரித்து வருகிறோம். ஒவ் வொரு நாளும் ஜோசியர் நடத்திய புதுப்புது லீலைகள் அம்பலமாகிறது. 100&க்கும் அதிகமானோரை ஏமாற்றி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். அவ ரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றார்.

0 comments:

Post a Comment