வானில் இருந்து குதித்த மாணவி பலி; 3 பேர் படுகாயம்!

Saturday, 5 February 2011

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ளது கருமந்துறை மலைக்கிராமம். இங்கு வலங்காப்பட்டு உள்பட பல மலைக்கிராமங்கள் இருக்கிறது.


வலங்காப்பட்டு கிராமத்தை சேர்ந்த பல மாணவிகள் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலையில் இருக்கும் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்து வருகிறார்கள்.

வலங்காப்பட்டை சேர்ந்த வாசுகி (வயது 16), சித்ரா (வயது 16), சுகன்யா (வயது 17), ஜெயக்கொடி (வயது 17) மற்றும் செல்வி ஆகிய 5 பேரும் வெள்ளிமலையில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். சனி, ஞாயிறு 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை என்பதால், நேற்று மாலை இவர்கள் சொந்த ஊரான வலங்காப்பட்டுக்கு செல்ல புறப்பட்டனர்.

அப்போது அவர்களுக்கு பஸ் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் அந்த வழியே செருப்பு பாரம் ஏற்றி வந்த டெம்போ வேனை நிறுத்தி அதில் ஏறினர். வேனை சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த இப்ராகிம் (வயது 21) என்பவர் ஓட்டி வந்தார்.

டெம்போ வேன் சேர்வாப்பட்டு பக்கம் வந்து கொண்டிருந்தது. அப்போது மாணவிகள் கீழே இறங்க வேண்டிய இடம் வந்தது. உடனே மாணவிகள் வண்டியை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார்கள். ஆனால் வண்டியை நிறுத்தாமல் ஓட்டி சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் என்னவோ ஏதோ என பயந்து தங்களை அவர் கடத்திதான் செல்கிறார் என்று நினைத்து செல்வியை தவிர மற்ற 4 பேரும் வண்டியில் இருந்து கீழே குதித்தனர்.

இதில் 4 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்து அலறி துடித்தனர். இதை அறிந்த வேன் டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவரும், அக்கம்பக்கம் இருந்தவர்களும் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் பாதிவழியிலேயே மாணவி வாசுகி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சித்ரா, சுகன்யா, ஜெயக்கொடி ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி வாசுகியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இதை அறிந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் திரளாக ஆஸ்பத்திரிக்கு வந்து பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இதுபார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி துணை கண்காணிப்பாளர் ராஜன், ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன், கருமந்துறை சப்- இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

பின்னர் போலீசார் வேன் டிரைவர் இப்ராகிம் மற்றும் கிளீனர் சாதிக்பாட்சா ஆகியோரை கைது செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் தாசில்தார் அழகேசன், துணை தாசில்தார் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் மோகனசுந்தரம், அண்ணாமலை ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்த மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினர்.

மாணவி வாசுகி இறந்த சம்பவம் கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment