தெற்காசியாவின் ஐரோப்பிய பழங்குடியினர்

Wednesday, 28 September 2011

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோர மலைப் பகுதியில், கிரேக்க வம்சாவளியினரான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். "கலாஷா" என்றழைக்கப்படும் பழங்குடியினர், உலகில் இன்று அருகி வரும் கலாஷ் மொழியைப் பேசி வருகின்றனர். கலாஷா மக்கள் இஸ்லாமியருமல்ல, கிறிஸ்தவர்களுமல்ல. அவர்களுக்கென்று தனியான மதம் உள்ளது. அநேகமாக கிரேக்கர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் பின்பற்றிய மதமாக இருக்கலாம். கலாஷா மத தெய்வங்களின் பெயர்களும், பண்டைய கிரேக்க தெய்வங்களின் பெயர்களும் ஒத்துப் போகின்றன.
மாசிடோனியாவை பூர்வீகமாக கொண்ட கிரேக்க சாம்ராஜ்யவாதி அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்தான். அலெக்சாண்டரின் படைவீரர்கள் சிலர் இன்றைய ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். அலெக்சாண்டர் தனது போர்வீரர்கள் உள்ளூர் பெண்களை திருமணம் முடிக்க ஊக்குவித்தான். அலெக்சாண்டர் கூட, பண்டைய ஆப்கான் இராசதானி ஒன்றின் இளவரசியை மனம் முடித்திருந்தான். இன்றைய கலாஷா மக்கள் கிரேக்கர்களாக இல்லாவிட்டாலும், கிரேக்க போர்வீரர்களுக்கும் உள்ளூர் ஆப்கான் பெண்களுக்கும் இடையிலான மண உறவின் விளைவாக தோன்றிய கலப்பினமாக இருக்கலாம். கலாஷா மக்களின் வாய்வழிப் புராணக் கதைகள், அலெக்சாண்டரின் வீர வரலாற்றைக் கூறுகின்றன. அவர்கள் தமது சந்ததி யாரிடம் இருந்து தோன்றியது என்று, மூதாதையரின் பெயர்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர்.
பிற்காலத்தில் ஆப்கான், பாகிஸ்தான் பிரதேசங்கள் இஸ்லாமிய மயப்பட்டன. கலாஷா மக்களின் ஒரு பகுதியினர் முஸ்லீம்களாகி தமது மரபை மறந்து விட்டனர். எஞ்சியிருக்கும் கலாஷா மக்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப் படுகின்றது. அவர்களது பாரம்பரிய உடைகளையும், கலாச்சாரங்களையும் விட்டு விட்டு "நாகரீகமடையுமாறு" வற்புறுத்தப் படுகின்றனர். கலாஷா மக்கள் நவீன கல்வியைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதனாலும் அவர்களின் சமுதாயம் தனிமைப் படுத்தப் பட்டு காணப் படுகின்றது. கலாஷா மக்களின் தனித்துவான கலாச்சாரத்தை ஆயிரம் வருடங்களாக பாதுகாப்பதற்கு, தனிமைப் படுத்தல் ஓரளவுக்கு உதவியுள்ளது. இப்போது தான் கலாஷா பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று எழுதப் படிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த சமூகத்தின் அறிவுஜீவி இளைஞன் ஒருவன் கலாஷ் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணியை விவரிக்கும் ஆவணப் படம் இது. (நன்றி: அல்ஜசீரா) 
0 comments:

Post a Comment