திருமணத்திற்கு முந்திய காதலின் தோல்வி 'நீ எந்தக் குடும்பத்தில் பிறந்தாய் என்பது முக்கியமல்ல..எப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கப் போகிறாய் என்பதே முக்கியமானது"-

Friday 30 September 2011

திருமணம் என்றவுடன் பெற்றோரின் சிந்தனையில் கவலையாகவும் எதிர்பார்ப்புடனும் சுழற்சி முறையில் வருவது மதம், கலாசாரம், குடும்பப் பின்னணி,கல்வி, பொருளாதாரம், வயது இடைவெளி என்பவைகளே முக்கிய அம்சங்களாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது. இவைகள் பெற்றோர்களினால் முன்னின்று பேசி நிச்சயிக்கப்படும் திருமணங்களின் பொருத்தப்பாடாகும். ஏனென்றால்,திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் மட்டும் அல்ல ஆலமரத்தையும் போன்றது.
ஆனால், இன்று நடப்பது என்ன? இளம் சமூகத்தினரிடையே காணப்படும் கண்டதும் பார்த்ததும் பேசியதும் காதல். அடுத்ததாக அவசரத் திருமணப் பந்தத்தில் இணைதல் எந்தளவுக்கு வாழ்க்கையைச் சக்தி பெற்று வளம் பெறச் செய்கிறது?
Adolescence என்றழைக்கப்படும் கட்டிளமைப்பருவத்தினர்-இளைஞர்கள் இவர்களின் எண்ணங்களின் ஊடுருவலில் திருமணம் சம்பந்தமான ஒரு யதார்த்த பூர்வமான தெளிவான நிலையைக் காண முடியுமா?
புயலடிக்கும் இந்தப் பருவத்தினரிடையே ஏற்படும் உடலியல் மாற்றம்,பாலியல் முதிர்ச்சி, மனவெழுச்சி மாற்றம், சுதந்திர உணர்வு,சகபாடிகள் தொடர்பு, பொழுது போக்குகளும் கவர்ச்சிகளும் என பல அத்தியாயங்கள் வந்து சென்று இறுதியாகத் தொழிலுக்கு ஆயத்தமாகும் போது பெண்கள் நண்பிகள், சகவாசம், தொடர்பு, உரையாடல், நட்பு காதல் என்று ஆரம்பித்து தன் துணையை தானே தேடிக் கொள்ளும் அளவுக்கு வலுப்பெற்று பெற்றோருடன் முரண்பட்டு நிற்கின்றனர்.
கல்வியின் இறுதிக் கட்டத்தில் சுதந்திரம், தனித்தன்மை என்று ஒரு முதிர்ச்சியை ஏற்படுத்திக் கொள்கின்றனர். குடும்பம், அந்தஸ்து, சமூகம்,உயரிய கல்வி, வளமாக தொழில். எதிர்காலம் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கனவு காணும் ஒரு கவர்ச்சிகரமான வர்;ணங்களின் வட்டத்தில் காதல் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கின்றனர். தங்களது முதிர்ச்சியைக் காட்டிப் பெற்றவர்களுடன் முரண்பட்டு நிற்கின்றனர்.. இதனால் பெற்றவர்களின் அன்பு,ஆதரவு, பாதுகாப்பு, பராமரிப்பு,மரியாதை அனைத்தையும் இவர்கள் இழந்து காதலுக்காக அந்நியப்பட்டு நிற்கின்றனர்.
காதல் சாதனை செய்யும் ஒரு சாதனமாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,அநாவசியமான ஒரு செயலைச் செய்ய மீண்டும் மீண்டும் தூண்டும் ஒரு வகை உளவியல் குறைபாடே காதல் என்பது உள மருத்துவர்களின் அபிப்பிராயம். இது பிறழ்நிலை உளவியலில்(Abnormal psychology) இடம்பெறும் நிர்ப்பந்த நீடிப்புக் கோளாறை (Obsessive Compulsive Disorder)ஒத்தது என்று சில உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
கலாசாரம், மார்க்கம், நன்னடத்தை, அறிவு,படிப்பு,தன்னம்பிக்கை, வளமான அல்லது நிரந்தரத் தொழில் போன்ற விடயங்களே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கருவிகள். ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களை ஏதோ ஒரு வகையில் (உதாரணம்: நடிகர்) Role model ஆகத் தங்களை நினைத்துக் கொண்டு சினிமா, கவர்ச்சிகரமான விளம்பரங்கள், ஊடகங்கள், வெகுசனத்தொடர்பு சாதனங்களின் மாயைகள், மேற்கத்தைய திறந்த கலாசார (Free Culture) இறக்குமதி இவைகள் எல்லாம் இள வயதினரைப் பாடாய்ப்படுத்தி சீரழிக்கத் தூண்டுகிறது. தன்னால் தேர்ந்தெடுக்கப்படும் பெண் கூட ஓர் அழகான மாடலிங் அல்லது நடிகையின் சாயலில் இருப்பதனை விரும்புவார்கள். அல்லது அப்படிப்பட்ட சுற்றுச் சூழலால் பாதிக்கப்படுகிறார்கள். இன்றைய பெரும்பாலான இளைஞர்களில் ஐந்து பேரில் ஒருவர் என்ற ரீதியில் தாங்கள் உபயோகிக்கும் போனில் கூட நடிகைகளின் படத்தைப் போட்டுக் கண் விழிக்கின்றனர். பத்துப் பேரில் ஒருவர் லெப்டெப்பில் ஆபாசப் படம் பார்க்கின்றார். 75 சத வீதமான இளைஞர்கள் இணையத்தளங்களில் 85 வீதமான அசிங்கத்தையே பார்க்கின்றனர். இவைகள் இன்றைய நாகரீக வளர்ச்சி கொடுத்த பரிசு. இந்தப் புறக் கவர்ச்சியின் எழுச்சி, நாகரீக மோகம், பாலியல் உந்துதல்,இவைகள் எல்லாம் இளைஞர், யுவதிகளை பாடாய்ப்படுத்திக் கேவலமான சிந்தனைக்கும் நடத்தைக்கும் இட்டுச் செல்கின்றன.
இவர்களிடம் போய் புனித காதல், திருமண பந்தத்தின் வெற்றியின் ரகசியம் என்றெல்லாம் எதிர்பார்க்கலாமா? எதிர்காலத்தை அழகான முறையில் தீர்மானித்துப் பல கட்டமைப்புகளை அமைத்துக் கொடுக்கும் பொறுப்புமிக்க குடும்பத்தினரிடமிருந்து வாக்குவாதப்பட்டு எதிர்த்து,தனித்து, காதலித்து, மணம் முடித்துச் சாதித்ததுதான் என்ன?
திருமணத்துக்கு முந்தைய காதல் (Pre-Marital love)விட திருமணத்திற்குப் பிந்திய காதல் (Post-Marital love) சலிப்பற்ற, உவகைமிகுந்த நாளுக்கு நாள் புதிது புதிதாக ஆரோக்கிய எண்ணங்கள், அன்புப் பரிமாற்றம் ஏற்பட வழியமைக்கிறது. அத்தோடு சிலவகை உள, உடல் (Psycho somatic)நோய்களைத் தடுப்பதற்கும் ஏதுவாக அமைகிறது.
இன்றைக்குப் பெரும்பாலான காதல் திருமணத்தில் லைப் கார்டியன் இல்லாமல் போய்விடுகிறது. திருமணத்துக்கு முன்னரே பேசி, அளவளாவி,உறவாடி, நல்ல புரிந்துணர்வின் அடிப்படையில்தான் இணைந்தோம் என்று பெற்றோரை நிராகரித்தவர்கள் பிறிதொரு சிறிய இடைவெளியிலேயே இனித்த வாழ்க்கை கசக்கத் தொடங்கும் போது குடும்பம்,பொருளாதாரம்,கல்வி, தொழில் என்று சிந்திக்கத் தலைப்படுகின்றனர். காதல் வயப்படும்போது ஒருவரின் உண்மையான குணப்பண்புகளை மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இவையெல்லாமே புறக்கவர்ச்சியின் மாயத் தோற்றங்களாகும் ஆனால்,மணமுடித்த பின்னர் வாழ்க்கை சட்டென புஸ் வாணமாகிவிடும் போதுதான் இவ்வளவு சீக்கிரத்தில் உளக்கிளர்ச்சிகள், மோகம், காதல் ஊடல், கூடல் எல்லாம் முடிந்து விட்டதா என்று எண்ணி வருந்துவதோடு அநியாயமாக அவசரப்பட்டு விட்டோமா? கண்மூடித்தனமாகச் சிக்கிவிட்டோமா என்ற கூட எண்ணத் தலைப்படுகின்றனர்.
இறுதிவரை நல்ல புரிந்துணர்வுடனும் காதலுடனும் வாழ்வோம் என்று சவால் விட்டவர்கள் திருமணத்தின் பின்னர் ஒழுங்கான ஒரு தொடர்பாடல் இன்;றி அன்பில் வறட்சி ஏற்பட்டு, இதயத்தின் மூலையில் ஏதோ ஒரு வகை ஏமாற்றம், காயம், கசப்பு, வெறுப்பு என்று கடைசி வரை குத்திக் கொண்டே காலத்தைக் கழிக்கின்றனர். இது காதல் திருமணம் செய்தவர்களால் மறுக்கப்பட முடியாத உண்மை.
இவற்றை ஊர்ஜிதப்படுத்தும் முகமாக எகிப்தின் அஸ்ஸகாசிக் பல்கலைக்கழக உளவியல்துறை பேராசிரியர் கலாநிதி இஸ்மாயில் அப்துல் பாரி மேற்கொண்ட ஆய்வில் 75 சதவீதமான காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளதனையும் பெற்றோரின் அங்கீகாரத்துடன் நடைபெற்ற திருமணங்கள் 96 சத வீதமானவை வெற்றி பெற்றுள்ளதனையும் உறுதி செய்துள்ளார். இது வெற்றி பெற்றவர்களின் பொருத்தப்பாட்டில் ஏற்பட்ட திருமணத்தினால் கிடைக்கும்; பாக்கியமாகும்.
அத்துடன் பேசி மணமுடிக்கப்பட்டவர்களின் காதல், புரிந்துணர்வு திருமணத்துக்குப் பின்னர் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நிம்மதி, மன அமைதி, பரஸ்பர ஒத்துழைப்பு, அக்கறை, அரவணைப்பு, நம்பிக்கை, மன்னிக்கும் மனப்பான்மை, பாதுகாப்பு எல்லாமே அழகுறக் கிடைக்கிறது. கணவன் மனைவிக்கிடையே சண்டை,சச்சரவு ஏற்பட்டாலும் நிலைத்து நிற்பதில்லை. அல்லது பெரியவர்களின் தலையீட்டில் அங்கு சமரச, சுமூக நிலை உருவாக்கிக் கொடுக்கப்படுவதோடு உதவி, பராமரிப்பு என்றெல்லாம் மனதுக்கும் வாழ்க்கைக்கும் ஒத்தடம் கிடைக்கிறது. இப்படிப்பட்ட திருமண பந்தத்தில் அழகுக்கோ கவர்ச்சிக்கோ உளக்கிளர்ச்சிகளுக்கோ கண்களால் திரையிடப்பட்ட மாயத் தோற்றப்பாடுகளுக்கோ இடமில்லை.
தொடங்கும் மணவாழ்க்கையில் அன்பு தொடர்ந்து இறுதிவரை நிலைத்து நிற்குமாறு குடும்ப வாழ்வை இருபாலாரும் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கை ஓசை எடுபடாது. உடல்களின் சங்கமிப்பை விட இரு உள்ளங்களின் இயல்பான இணைவு மிக முக்கியமானது என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.
மேலும், மணவாழ்க்கை வெற்றி பெற தம்பதியினரிடையே தொடர்பாடல் கட்டாயம் இருக்க வேண்டும். திருமணத்துக்கு முன்னைய காதலில் இதுதான் ஏற்படுகிறது. மணிக்கணக்கில் பேசுவார்கள். இறுதியில் திருமணத்துக்குப் பிறகு பேசுவதற்கு என்ன உள்ளது? எல்லாமே பேசித் தீர்த்து விட்டோமே என்ற சலிப்பும் இடைவெளியும் ஏற்படுகின்றது. ஆரம்ப மணவாழ்க்கை தேனாக இனித்தாலும் அழகு குளிர்ச்சியாகத் தென்பட்டாலும் நாட் செல்லச் செல்ல காதல் சுருங்கி காய்ந்து வெளியே எறியப்படும் போது மனதளவில் கடுமையான விலகல், வலிகள் ஏற்படுகின்றன. இருவரில் ஒருவரிடமிருந்து கூர்முனையைப் போன்ற வார்த்தைகள் வரும்போது உள்ளம் வலுவிழந்து,உடம்பு தொய்வு பெற்று கனவு கண்ட வாழ்க்கை மண்ணாகும் போதுதான் பெற்றவர்களும் சமூகமும் நினைவுக்கு வரும். இப்படிப்பட்டவர்களிடம் உள ரீதியிலான விவாகரத்து (Psychological Divorce) எப்போதோ கையொப்பமிட்டிருக்கும்.
இரு மனங்களின் இணைவில் ஏற்படும் மண வாழ்க்கையானது (Post- Marital)பல உயரிய இலட்சியங்களையும் எண்ணங்களையும் குறிக்கோள்களையும் விட்டுக் கொடுப்புகளையும் நோக்கமாகக் கொண்டவை. மேலும் வாழ்நாள் முழுவதும் ஒருவர் அருகாமையில் ஒருவர் தங்கி அரவணைப்புடன் இருப்பதால் சிறிய பிணக்குகள்,முறுகல்கள் நீர்மேல் குமிழி போல் காணாமல் போய்விடுகிறது.
அந்தரங்கம் பேணப்பட வேண்டும். பாலூக்கத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். உயிரோட்டமான தொடர்பாடல்கள் தொடர்ந்திருக்க வேண்டும்,உரிமைகள், பெறுமானங்கள் பேணப்பட வேண்டும். எல்லாவற்றிலும் பாசமிகுந்த பற்றுணர்வு, நட்புணர்வு ஏற்பட வேண்டும். தம்பதியினரிடையே தொடரும் பாசமும் காதலும் வயோதிபப் பருவத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாக மேலைநாட்டு நவீன உளவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க உளவியலாளர் அமைப்பு தமது வருடாந்த மகாநாடொன்றில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றிலிருந்து (9.000 குடும்பங்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது) இந்த உண்மை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகையால் ஒருவரையொருவர் சரியான முறையில் புரிந்து நிதர்சனமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வறட்டுப் பிடிவாதம். கோபம், பொறாமை,வெறுப்பு இவைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டுக் காதலுடன் கூடிய நெகிழ்ச்சியான,தளர்வான, விசுவாசமான, தோழமை மிகுந்த வாழ்க்கையை மண வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
'வாழ்க்கை என்பது தேவைகளும் பொறுப்புகளும் நிறைந்தது. ஒருவரது சிறப்புகளை மட்டும் பாராட்டாமல் குறைகளை மனதார ஏற்றுக் கொள்ளும் தம்பதியினரே இவற்றை நிறைவேற்றத் தகுதியானவர்கள்." 
நன்றி: வீரகேசரி 

0 comments:

Post a Comment