படப்பிடிப்பால் "ஐந்தறிவு' ஜீவன்களுக்கு ஆபத்து!

Tuesday, 25 January 2011

வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில், நண்டங்கரை தடுப்பணையில் பிரமாண்டமான "செட்டிங்' அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக கோவை வனக்கோட்டத்தில் அமைந்துள்ளது போளுவாம்பட்டி வனச்சரகம்.

இதிலுள்ள குஞ்சராடி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் சாடியாறு, கோவைக்குற்றாலத்தில் அருவியாக வழிந்து, சாடிவயலில் ஆறாகப் பாய்ந்து, கூடுதுறையில் நொய்யலில் கலக்கிறது.

இந்த சாடியாற்றுக்கு நண்டங்கரை நீரோடை, முக்கியமான கிளை ஆறாகவுள்ளது. எவ்வளவு வறட்சியான காலத்திலும் இந்த நீரோடையில் தண்ணீர் வற்றியதில்லை. சாடியாற்றில் இந்தத் தண்ணீர் கலந்து, நொய்யலில் சங்கமித்த பின், சாயக்கழிவுகளால் எதற்கும் பயனின்றிப் போகிறது.

அதனால், ஆண்டு முழுவதும் பாய்ந்தோடும் இந்த இயற்கை ஓடை நீரைப் பயன் படுத்தும் பொருட்டு, நண்டங்கரையில் தடுப்பணை கட்ட "சிறுதுளி' அமைப்பு முன் வந்தது. நமக்கு நாமே திட்டத்தில், ஒரு கோடியே 28 லட்ச ரூபாய் செலவில் கடந்த 2008ல் இந்த தடுப்பணை கட்டப்பட்டது. அதில், 51 சதவீதத் தொகையான 65 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை "சிறுதுளி' அமைப்பே ஏற்றுக் கொண்டது.

மீதமுள்ள 62 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வழங்கியது. இந்த நிதியை அரசிடமிருந்து வாங்குவதற்கு, அந்த அமைப்பு நடத்திய மவுனப் போராட்டம் யாரும் அறியாதது. கடந்த 2008 டிச.26ல் இந்த தடுப்பணை திறக்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலும் தண்ணீர் இல்லாமல் இருந்ததே இல்லை. பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, தற்போது மத்வராயபுரம் கிராம ஊராட்சி நிர்வாகம் வசம் உள்ளது.

தடுப்பணையில் உள்ள தண்ணீரால் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன; கிட்டத்தட்ட 7 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் நன்றாகவுள்ளது. அது மட்டுமின்றி, இந்த தடுப்பணையில் உள்ள தண்ணீர், யானை, சிறுத்தை, மான்கள், காட்டெருது உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளுக்கும் குடிநீர் ஆதாரமாகவுள்ளது.

இதனால், கல்கொத்தி, சாடிவயல் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதும் நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது. இத்தனை பலன்களைத் தரும் நண்டங்கரை தடுப்பணை பகுதியில் பல்வேறு அத்துமீறல்களும் நடந்து வருவதாக பரவலாக புகார்கள் எழுந்தன. விடுமுறை நாட்களில் இந்த தடுப்பணைக்கு வரும் இளைஞர்கள் பலரும், இந்தப் பகுதியை திறந்த வெளி "பார்' ஆக பயன் படுத்துவதுடன், பாட்டில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அதே பகுதியில் கொட்டி வந்தனர்.

இதற்கு 100 மீட்டர் தொலைவிலுள்ள வனப்பகுதியில், அத்து மீறி பலரும் நுழைந்து விடுவதும் அடிக்கடி நடந்து வந்தது. அதனைத் தடுக்க வனத்துறையினர், சமீபகாலமாக தீவிர கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் விளைவாக, தடுப்பணைப் பகுதியில் நடந்த அத்துமீறல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. துணை முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி : அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள், நண்டங்கரை தடுப்பணைக்கு "சினிமா சூட்டிங்' பெயரில் மாபெரும் சோதனை வந்துள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் "ஏழாவது அறிவு' என்ற திரைப்படத்துக்காக இந்த தடுப்பணை மற்றும் சுற்று வட்டாரங்களில் பிரமாண்டமான "செட்' போடப்படுகிறது.

நடிகர் சூர்யா, கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்துக்காக தடுப்பணைக்குள்ளேயே கோவில் மணி மண்டபம் போலவும், அரண்மனை வாயில் போலவும் "செட்டிங்' போடும் பணி நடந்து வருகிறது. தடுப்பணையின் கரைப்பகுதியில் நாலாபுறத்திலும் ஆசிரமம், வீடுகள், மண்டபம் என பல வடிவங்களில் "செட்டிங்' அமைக்கும் பணி, கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடந்து வருகிறது. நண்டங்கரை ஓடை இந்த தடுப்பணையில் கலக்கும் இடத்தில், முற்றிலுமாக தடுக்கப்பட்டு அந்த இடத்தில் இயற்கை நீர் வீழ்ச்சி போன்று அமைப்பதற்காக, பாறை போன்ற "செட்' அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதகு வெளியேறும் பகுதியிலும் சுத்தமாகத் தண்ணீர் வெளியேறுவது அடைக்கப்பட்டு, அங்கு அரண்மனை வாயில், படிக்கட்டு, முற்றம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

தடுப்பணையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் "செட்' போடுவதற்காக சுற்றிலும் உள்ள நிலங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, மண் மேடுகளும் சமமாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பலகைகள், சவுக்குக் கட்டைகள், ரீப்பர்கள், டிரம்கள், சாக்குகளுடன் மூட்டை மூட்டையாக பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் பெயிண்ட்களை பயன் படுத்தி, "செட்' அமைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காக அதே பகுதியில் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. செட்டிங் அமைப்பதற்கான பொருட்கள், ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.

அங்கேயே சாப்பிட்டு, உபாதைகளைக் கழிக்கும் இவர்களால் அப்பகுதியின் சுற்றுச்சூழலே நாசமாகி வருகிறது. பல இடங்களில் மது பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் கிடப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு வாரத்திலேயே இப்படியிருக்கும் நிலையில், ஒரு மாதத்துக்கு இங்கு படப்பிடிப்பு நடத்த மத்வராயபுரம் கிராம ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதனால், ஒரு மாதத்துக்குப் பின், அப்பகுதியின் சூழல் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்யவே வேதனையாகவுள்ளது.

எல்லாவற்றையும் விட, தடுப்பணையின் தண்ணீர் இப்போதே பெருமளவில் மாசு பட்டு, கருப்பு நிறமாய் மாறியுள்ளது; ரசாயன நெடி, ஆளைத் தூக்குகிறது. வன உயிரினங்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள கிராமங்களில் உள்ள ஆடு, மாடுகளும் இந்த தடுப்பணைக்கு வந்து தண்ணீர் குடிக்க முடியாத அளவிற்கு நாலாபுறத்திலும் "செட்' அமைக்கப்பட்டுள்ளது.

பிப்.5ல் அங்கு துவங்கும் படப்பிடிப்பு, 20 நாட்களுக்கும் அதிகமாக நடக்குமென்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தத் தடுப்பணைப் பகுதி முழுவதும், படப்பிடிப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அப்போது, பொது மக்கள் மட்டுமின்றி, வன விலங்குகள், கால்நடைகள் எதுவுமே அந்தப் பகுதியில் எட்டிப் பார்க்க முடியாது.

படப்பிடிப்பு முடிந்தபின், இந்தத் தடுப்பணையின் தண்ணீரை வன உயிரினங்கள் குடித்தால், அதனால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு அதிகம். அனைத்துக்கும் மேலாக, இந்த படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் இந்த இடம், நிரந்தரமாக "சூட்டிங்' பகுதியாக மாறிவிடும் அபாயமுண்டு.

இந்த தடுப்பணையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மட்டுமே, மத்வராயபுரம் கிராம ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. வனப்பகுதிக்கு வெளியில்தான் இந்த படப்பிடிப்பு நடந்தாலும், சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்திலும் "முன்னெச்சரிக்கையாக' அனுமதி பெறப்பட்டுள்ளது. சுற்றிலும் "செட்' போடும் இடங்கள் பட்டா நிலங்கள் என்று கூறினாலும், அதில் வருவாய்த்துறை இடங்களும் உள்ளன.அந்த புறம்போக்கு இடங்களையும் சுத்தம் செய்து, "செட்' அமைத்துள்ளனர்.

இதற்காக வருவாய்த்துறையிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. தடுப்பணை அமைப்பதற்கு பெருமளவு நிதியை வழங்கியுள்ள "சிறுதுளி' அமைப்பிற்கும் இது குறித்து தகவலே தெரியவில்லை. எந்தத் துறை அனுமதித்திருந்தாலும், இயற்கை நீரோடையைத் தடுப்பதற்கும், அதனை பாழ்படுத்துவதற்கும் யாருக்கும் எந்த உரிமையுமில்லை.சாதாரண சினிமாவுக்காக, இயற்கை நீரோடையை மாசு படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் தெரியவில்லை.

இதனால், எதிர்காலத்தில் வன உயிரினமோ, கால்நடையோ உயிரிழந்தால் அதற்கு யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை. பணத்துக்காகவோ, துணை முதல்வர் மகன் என்பதற்காகவோ, ஊராட்சி நிர்வாகம் இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியிருக்கலாம்.

மற்ற துறையினரும் அதிகாரத்துக்கு பயந்திருக்கலாம்.ஆனால், இந்த படப்பிடிப்பில் பல வித விதிமீறல்கள் நடந்திருப்பதோடு, அதனால் அங்குள்ள நீர் நிலையும், வனச் சூழலும் பெருமளவில் மாசு பட்டுள்ளது அப்பட்டமான உண்மை. இதன் பாதிப்பை உணர்ந்து, தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள இந்த கிராமத்துவாசிகளும், வனத்துறையின் கீழ்நிலை அலுவலர்களும் இந்த படிப்பிடிப்பு வேலைகளை வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரிய காட்சி. இந்த "ஏழாவது அறிவு' படப்பிடிப்பால் பாதிக்கப்படப்போவது "ஐந்தறிவு' ஜீவன்களும், அறியாத விவசாயிகளும், அப்பாவி பொது மக்களும்தான். இந்த அத்துமீறலுக்கு எதிராக எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து களம் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஏதோ ஒரு காரணத்துக்காக இப்போது அமைதி காத்தால், எதிர்காலத்தில் எந்த இயற்கைச் சொத்தையும் யாராலும் காப்பாற்றவே முடியாது. அது வனப்பகுதி இல்லை!: படப்பிடிப்புக்கு "செட்' அமைக்கும் இடம், வனப்பகுதி இல்லாவிட்டாலும் அதற்கு மிக அருகிலேயே உள்ள பகுதியாகும். மேய்ச்சலுக்கும், குடிநீருக்கும் அங்கு வன விலங்குகள் வருவதுண்டு. தடுப்பணை நீர் மாசு படுவதால் விலங்குகளின் உயிருக்குப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இது குறித்து கோவை டி.எப்.ஓ., திருநாவுக்கரசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: அது எங்களுடைய இடமில்லை; பட்டா நிலத்தில் "செட்டிங்' அமைப்பதை நாங்கள் தடுக்க முடியாது. அது "பஃபர் ஜோன்' பகுதிக்குள்ளும் வருவதில்லை. கிட்டத்தட்ட 180 மீட்டர் தாண்டியே உள்ளது. தடுப்பணைப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகமாகி, மாசு படுவதைக் கருத்தில் கொண்டு, வன உயிரினங்கள் தண்ணீர் குடிப்பதற்காக, தடுப்பணைக்கு முன்பாகவே இரண்டரை லட்ச ரூபாய் செலவில் கசிவுநீர்க் குட்டை அமைத்து வருகிறோம்.அதற்காக தடுப்பணைக்கு வன விலங்குகள் வந்து தண்ணீர் குடிக்க வராது என்று சொல்வதற்கில்லை.

அந்தத் தண்ணீரை மாசு படுத்துவது பற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான் ஆய்வு செய்ய வேண்டும். படப்பிடிப்புக் குழுவினர் யாரும், வனப்பகுதிக்குள் செல்லாதபடி தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இது குறித்து நோட்டீசும் அனுப்பவுள்ளோம்.

வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர், சிறுதுளி: (இந்த சிறுதுளி அமைப்புதான், இந்த தடுப்பணை கட்டப்பட்டதில் 51 சதவீதத் தொகையான 65 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை தனது பங்களிப்பாக வழங்கியது)அங்குள்ள விவசாயிகளின் நலன் கருதியும், சுற்றுப்புறத்திலுள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டுமென்ற நோக்கிலும்தான் இந்த தடுப்பணையை எங்களது அமைப்பு முன் நின்று அமைத்தது. வேறு எந்த கேளிக்கை பயன் பாட்டுக்கும் இதைப் பயன் படுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

நண்டங்கரை தடுப்பணையில் "செட்டிங்' அமைக்க அனுமதித்திருப்பது, எங்களுக்கு வேதனை அளிப்பதாகவுள்ளது. எனவே, அதற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கவுள்ளோம். ஜெயச்சந்திரன், மாநில இணைச் செயலாளர், தமிழக பசுமை இயக்கம்: சினிமா படப்பிடிப்பு என்றால், எங்கே வேண்டுமானாலும் அனுமதிக்கலாம் என்பது இந்த ஆட்சியின் வாடிக்கையாகி விட்டது. கடந்த 1999ல் ஊட்டியில் "ராஜூசாச்சா' என்ற இந்திப் படத்துக்காக வனப்பகுதியில் பிரமாண்ட "செட்' போட இதே அரசுதான் அனுமதித்தது.

அப்போது பசுமை இயக்கம் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம்; நீதிபதிகள் குழு ஆய்வு செய்து, படப்பிடிப்புக் குழுவுக்கு 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.நீர் நிலைகளை மாசு படுத்தக்கூடாது என்று உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் இந்தச் சூழலில், ஒரு சினிமா "செட்டிங்'கிற்காக இயற்கையான நீர்நிலையை மாசு படுத்துவதை ஏற்கவே முடியாது. இதனை உடனடியாக அரசே தடுத்து நிறுத்த வேண்டுமென்பதுதான் எங்களது கோரிக்கை.

இது போன்ற விஷயங்களில், விவசாயிகளும், பொது மக்களும் முன் வந்து போராட வேண்டியது அவசியம். கணேஷ், துணைத்தலைவர், "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பு: கோவை மண்டலத்திலுள்ள வனப்பகுதிகளில் வாழும் வன உயிரினங்களுக்கு பல விதங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இப்போது படப்பிடிப்பு என்ற பெயரில், வன விலங்குகளுக்கான குடிநீர் ஆதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது.

இதனை உடனடியாகத் தடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். இதற்கு எந்தத் துறை அனுமதித்திருந்தாலும் அதனை உடனே ரத்து செய்ய வேண்டும். அந்த நீர் நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள மாசு மற்றும் பாதிப்பைச் சரி செய்யும் பொருட்டு, சம்மந்தப்பட்ட படப்பிடிப்புக் குழுவினரிடம் நஷ்டஈடு வசூலிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், சூழல் அமைப்புகளைத் திரட்டி, போராட்டம் நடத்துவோம். எதிர்காலத்தில் எந்த சூழலையும், நீர் நிலையையும் மாசு படுத்தும் வகையில், எந்த படப்பிடிப்பையும் அரசு அனுமதிக்கக்கூடாது என்பதே எங்களது வலியுறுத்தல். ஆய்வுக்குப் பின் நடவடிக்கை; கலெக்டர்: இந்த தடுப்பணைக்கு அருகேயுள்ள பட்டா நிலங்களில் மட்டுமின்றி, வாரி புறம்போக்கு உள்ளிட்ட வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தையும் சுத்தம் செய்து, "செட்டிங்' அமைக்கப்பட்டுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.

இது குறித்து கோவை தெற்கு தாசில்தார் லட்சுமி காந்தனிடம் நேற்று காலையில் கேட்டபோது, ""துணை தாசில்தார், வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளரை அனுப்பி ஆய்வு செய்யச் சொல்கிறேன்,'' என்றார். நேற்று மாலை வரை, எந்த பதிலும் கிடைக்கவில்லை. கோவை கலெக்டர் உமாநாத்திடம் கேட்டபோது, ""இதுபற்றி எனக்கும் தகவல் வந்தது. அந்த தடுப்பணையிலும், அதைச் சுற்றிலும் "செட்டிங்' அமைக்க, எந்த வகையான அனுமதி பெற்றுள்ளனர், அனுமதி மீறப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறேன்.

வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி "செட்டிங்' அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். எல்லாமே நடிப்பா?: கோவை மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட நடிகர் சூர்யாதான், இந்த படத்தின் நாயகன். கோவையில் "நொய்யலுக்கு நூறு' என்ற நிகழ்ச்சியை "சிறுதுளி' அமைப்பு நடத்தியபோது, அதில் பங்கேற்று பணம் திரட்டியும் தந்தவர். தனது "அகரம் பவுண்டேஷன்' சார்பில், கொங்கு மண்டலத்துக்குட்பட்ட பல பகுதிகளில் நலத்திட்ட உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.

அவரே, இப்போது நொய்யலின் முக்கிய நீர் ஆதாரமாகவுள்ள நண்டங்கரை நீரோடையை மாசு படுத்தும் வகையில் சினிமா "செட்டிங்' அமைக்கும் படத்தில் நடிப்பது, அவரது முந்தைய பல செயல்களுக்கும் முரண்பாடாகவுள்ளது. சமூகப் பொறுப்போடு செயல்படுவதாகக் கூறும் நடிகர்கள், இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களையும் தவிர்க்கக் கூடாதா என்று இந்த மண்ணைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதுவும், இதுவும் ஒன்றா?:

இந்த தடுப்பணை கட்ட செலவழித்ததே ஒரு கோடியே 28 லட்ச ரூபாய் மட்டுமே. அதனால், பயன் பெறுவது ஏராளமான விவசாயிகளும், சுற்றிலும் உள்ள பல ஆயிரம் பொது மக்களும். அதே தடுப்பணையைப் பாழ் படுத்த, (வெறும் 10 நாள் படப்பிடிப்புக்காக) தடுப்பணை கட்டியதற்கும் அதிகமான தொகை செலவிடப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்த பலனுமில்லை; பாதிப்பே அதிகம். இதே தொகையை, மக்களுக்குப் பயன் பெறும் வகையில், ஒரு தடுப்பணை கட்ட இதே தயாரிப்பாளர் கொடுப்பாரா என்று கேட்கிறார்கள் கோவை மக்கள்.

0 comments:

Post a Comment