தற்போது உள்நாட்டில் பாராளுமன்றம் தொடக்கம் சர்வதேசம் வரை யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தே பேசப்படுகிறது. அண்மைக் காலமாக அங்கு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் கொலை கொள்ளை, கப்பம் போன்ற சமூக விரோதச் செயல்களின் பின்னணியென்ன என்பதை மக்களுக்கு தெளிவு
படுத்துவதுடன் அவற்றை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
எனினும் அங்கு நடக்கும் சமூக விரோதக் குற்றச் செயல்களின் யதார்த்தமான நிலைமைகளை விளக்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, சம்பவங்களுக்கான சூழலையும் பின்னணியையும் திரிபுபடுத்தி மக்களை குழப்பும் நோக்குடன் அங்கு நடக்கும் சம்பவங்களுக்கு முழுக்க முழுக்க அரசியல் சாயம் பூச முற்படுவதும் இனவாதம் பேசுவதும், அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவதிலேயை கண்ணாயிருப்பதும் சில அரசியல் பினாமிகளுக்கும் சில ஊடகவியலார்களுக்கும் தொழிலாகிவிட்டது. இவர்கள் இன்னும் கடந்த காலத்தைப்போன்று ‘சவப்பெட்டிக் கடை வியாபாரம்’ செய்யவே முற்படுகின்றனா;. இவர்களுக்கு இதனால் நிறையவே அனுகூலங்கள் கிடைக்கலாம்.
ஆனால் அச்சத்துடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வழி தெரியாமல் குழம்பியிருக்கும் அப்பாவி மக்களுக்கு இவர்களது விமர்சனங்களும் பிரசாரங்களும் மேலும் அச்சத்தையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டோர் விளங்கிக்கொள்ள வேண்டும். அதேவேளை மக்களும் இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருக்கும் சமூக விரோத குற்றச் செயல்களை ஆராய்ந்து பார்க்கும்போது பின்வரும் விடயங்களை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். இத்தகைய கிரிமினல் குற்றங்கள் வடக்கு கிழக்கில் மட்டும்தான் நடக்கிறதா? இல்லையே. நாடு முழுவதும் நடக்கிறது. அண்மையில் கூட கேகாலை, மாத்தறை, புத்தளம், வெள்ளவத்தை என பரவலாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
எனினும் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை அண்மைக் காலமாக இச்சம்பவங்கள் திடீரென அதிகாரித்திருப்பதன் பின்னணி பற்றி நோக்கும்போது பின்வரும் விடயங்கள் முக்கியமானவை. நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தபின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமான அளவு தளார்த்தப்பட்டுள்ளன. (கொழும்பு உட்பட) யாழ். குடாநாட்டில் தற்போது உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள்,இரவு நேர ஊரடங்குச் சட்டம் என்பன நீக்கப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வீதித் தடைகள் சோதனைச் சாவடிகள் காணப்பட்டாலும் அவை பெயரளவில்தான் இருக்கின்றதே தவிர எவ்விதமான சோதனைகளும் கிடையாது. இதனால் நடமாடும் சுதந்திரம் தாராளமாக இருப்பதால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்; இலகுவாக தப்பிச் செல்ல முடிகின்றது.
அத்துடன்; பயங்கரவாத அமைப்புகள் தோற்றம் பெற்றதிலிருந்து நாட்டில் பரவலாக ஆயுதக் கலாசாரம் புரையோடிப்போயுள்ளது. அது இலங்கையில் மட்டுமல்ல யுத்தம் நடைபெற்ற, நடைபெற்று வருகின்ற அனைத்து நாட்டிற்கும் பொருந்தும். எனவே குறிப்பிட்ட ஒரு சம்பவம் ஆயுத முனையில் நடைபெற்றால் உடனடியாக படைத்தரப்பை நோக்கி விரலை நீட்டுவதானது, உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவே வழிவகுக்கும். மேலும் ஒரு சம்பவத்தில் படைவீரர் ஒருவா; குற்றவாளியாக இனங்காணப்பட்டால் தொடரும் சம்பவங்களுக்கெல்லாம் படையினரே காரணமென்று கூறுவதில் அர்த்தமில்லை.
எனவே ஒவ்வொரு சம்பவத்துடனும் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியமானது. ஓவ்வொரு பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், அருகிலுள்ள பொலிஸ் மற்றும் படைத்தரப்பினருக்கு அவசரத் தகவல்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் தொலைபேசி இலக்கங்களைதெரிந்துவைத்திருப்பது பாதுகாப்பானது. குறிப்பிட்டதொரு பகுதியில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டங்கள் காணப்பட்டாலோ உடனடியாக படையினருக்கு தகவல் வழங்கினால் குற்றவாளிகளை இலகுவில் கைது செய்வதற்கு உதவியாக இருக்கும்.
யாழ். குடா நாட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தினால், படையினர் மக்களை கெடுபிடிகளுக்கு உள்ளாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்தினால் அங்கு நடைபெறும் சமூக விரோதக் குற்றங்கள் தொடர்பான வீண்பழிகளை எதிர்கொள்ள வேண்டிய தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இத்தகைய சம்பவங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நடைபெற்றாலும் அது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடைபெறும்போது மட்டுமே அரசியலாக மாற்றம் பெறுவதை கவனத்திற்கொள்ள வேண்டும்.
மேலும் எந்தவொரு சமூக விரோதப் பிரச்சினையானாலும் அதற்கு சாத்தியமான வழிகளில் தீர்வு கண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு அரசியல் சாயம் பூசி, இனவாதம் பேசி மீண்டுமொரு முறை மக்களை புதைகுழிக்குள் தள்ளிவிடும் முஸ்தீபுகளை மேற்கொள்பவர்களும் ஒருவிதத்தில் சமூக விரோதிகளே என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
மேலும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அசம்பாவிதங்களின் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் அதன் விளைவுகள் அரசாங்கத்திற்கு வீண்பழிகளை ஏற்படுத்தும் எற்பதால் இவ்விடயத்தில் அரசாங்கம் விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவோம்.
நன்றி; vidivu.lk (அசோக்குமார்)
0 comments:
Post a Comment