மதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அடிப்படைவாத சவூதி அரேபியாவில் தஞ்சம்

Saturday, 22 January 2011

அமெரிக்காவின் உதவியுடன் பதவியை காப்பாற்றிக் கொள்பவர்கள். அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள். எல்லோருக்கும் பென் அலியின் கதை ஒரு சிறந்த பாடம். அரபுலகின் முதலாவது மக்கள் எழுச்சியின் விளைவாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டோடிய துனிசியா ஜனாதிபதி பென் அலி, இன்று சவூதி அரேபியாவில் சிறைக்கைதி போல வாழ்கின்றார். அதிகார மமதையுடன், டாம்பீகமான பணக்கார வாழ்வு வாழ்ந்தவர். துனிசியாவில் பல வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர். 23 வருடங்களாக ஒரு தேசத்தின் அதிபதியாக எதிர்க்க ஆளின்றி அதிகாரம் செலுத்தியவர். இன்று உடல் தளர்ந்த வயோதிபராக, 74 வயதில் ஒதுங்க இடமின்றி பரிதாபகரமாக அலைந்தார். முதலில் மால்ட்டாவிடம் அடைக்கலம் கேட்டார். பின்னர் நெருக்கமான அயலுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள பிரான்சிடம் தஞ்சம் கோரினார். ம்ஹ்ம்.... யாருமே அந்த அரசியல் அகதியை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இத்தனை காலமும் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்ததால், ஒபாமாவுக்கு தொலைபேசிப் பார்த்தார். வாஷிங்டனில் பென் அலியின் அழைப்புக்கு யாரும் பதில் சொல்லவில்லை. இறுதியில் மதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அடிப்படைவாத சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.

பென் அலி காலம் பூராவும் யார் யாருக்கு சேவை செய்தாரோ, அவர்கள் யாரும் ஆபத்து நேரத்தில் உதவவில்லை. அரேபிய சகோதரர்களை பகைத்துக் கொண்டு, இஸ்ரேலுடன் நட்பு பாராட்டினார். ஒரு காலத்தில் துனிசியாவில் PLO தலைமையகத்தை இஸ்ரேல் குண்டு வைத்து தகர்த்தது. அப்படியிருந்தும் அதை எல்லாம் மன்னித்து விட்டு, முன்னாள் பிரதமர் ஆரியல் ஷரோனை கூப்பிட்டு விருந்து கொடுத்தார். ஆரியல் ஷரோன் ஒரு போர்க்குற்றவாளி என்று உலகமே குற்றஞ்சாட்டினாலும், தயக்கமின்றி கை குலுக்கினார். இருந்தும் என்ன? ஆபத்து நேரத்தில் உற்ற நண்பனுக்கு உதவ இஸ்ரேல் முன் வரவில்லை. இது தான் யதார்த்தம். சில தமிழர்கள் இப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுமாறு எங்களை அழைக்கிறார்கள். அவர்களுக்கும் பென் அலி போல அடி பட்டால் தான் ஞானம் பிறக்கும்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தலைநகரான தியூனிசில் டாக்சியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் செல்லும் பாதை தடுக்கப் பட்டிருந்தது. வேறு வழியால் சுற்றிச் சென்றதால் 20 நிமிடம் அதிகமாக பிடித்தது. டாக்சி சாரதி வழி நெடுக, அமெரிக்கர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் தனது அரசை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலம். அயல் நாடான அல்ஜீரியாவுடன் ஒப்பிடும் போது, துனிசியாவில் தனி நபர் வருமானம் அதிகம். அதனால் பெரும்பாலான துனிசியர்கள் பென் அலியின் சர்வாதிகாரத்தை பொறுத்துக் கொண்டார்கள். ஆனால் முன்பு பிரான்ஸ் இருந்த இடத்தில் இன்று அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று நடந்து கொண்டிருந்த ஈராக் போரினால், அரபு இன உணர்வுகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம். அதனால் அரசு பகிரங்கமாக அமெரிக்கா பக்கம் நின்றதை, துனிசிய மக்கள் விரும்பவில்லை. துனிசியாவில் பயணம் செய்த நாட்களில் நான் சந்தித்த அனைவரும் அந்த விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதால், அங்கே போவதற்கு முன்னம் எனது பிரெஞ்சு மொழி அறிவை சற்று மெருகூட்டிக் கொண்டேன். நான் தட்டித் தடுமாறி துனிசியர்களுடன் பிரெஞ்சில் சம்பாஷணையை தொடங்கினால், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். சுற்றுலாப்பயணிகளின் வருகை மட்டுமல்ல, அமெரிக்காவின் நெருக்கமும் ஆங்கில மொழி கற்றோரின் அதிகரிப்புக்கு காரணம். சர்வதேச வர்த்தக சமூகத்திற்காக, துனிசியாவில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகை கூட வெளி வந்து கொண்டிருந்தது. அமெரிக்கா அல்கைதாக்கு எதிரான போரில் வென்றதோ இல்லையோ. துனிசியாவில் அத்தகைய அமைப்புகளை அடியோடு அழித்து விட்டார்கள். மசூதியில் அரசியல் பேசினால் கூட, இரகசியப் போலீசார் பிடித்துச் சென்று சிறையில் போட்டார்கள். தற்போது நடந்துள்ள புரட்சியில் இஸ்லாமிய மத அரசியல் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை காணவில்லை என்று பலர் "வருத்தப்பட்டார்கள்." அப்படி வருத்தப் பட்டவர்கள் மேற்குலக ஊடகவியலாளர்கள். புரட்சிக்கு இஸ்லாமிய முலாம் பூச முடியாத வருத்தம் அவர்களுக்கு.

இதுவரை துனிசியாவை பார்க்காதவர்கள், அது துபாய், குவைத் போலிருக்கும் என்று நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பிரான்சில் வாழும் ஒருவரை கண்ணைக் கட்டி கூட்டி வந்து டியூனிஸ் நகரில், அல்லது வட துனிசியா பகுதியொன்றில் கொண்டு வந்து விட்டால், வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. இயற்கை, நில அமைப்பு மட்டுமல்ல, கட்டிடங்கள் தெருக்கள் எல்லாமே பிரான்சின் தெற்குப் பகுதி போன்றிருக்கும். ஒரு சராசரி "முஸ்லிம் நாட்டில்" நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் அங்கே கிடையாது. தெருவோர பெட்டிக் கடையில் சாதாரணமாக பியர், வைன் வாங்கலாம். பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். நகரங்களில் நட்சத்திர ஹோட்டல் டிஸ்கோதேக்கில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நங்கைகளைக் காணலாம். துனிசிய பெண்கள் மிகவும் அழகானவர்கள். ஐரோப்பிய மகளிரைப் போல கவர்ச்சியான உடை அணிவதும் சர்வசாதாரணம். ஆனால்... ஆனால்... தலையில் முக்காடு போட்ட பெண்ணை துனிசியாவில் மிக மிக அரிதாகவே காண முடியும்.

பிரான்சில் முக்காடு தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பொழுது, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பிரான்சில் அப்படி ஒரு சட்டம் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, துனிசியா அரசு முக்காடு அணிவதை தடை செய்து விட்டது. முக்காடு அணிந்தவர்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்று பென் அலி நினைத்தாரோ என்னவோ? அல்லது மதச்சார்பற்ற லிபரல் கொள்கையை பின்பற்றுவதில் தான் மேற்குலகின் சிறந்த மாணவன் என்று காட்ட விரும்பினாரோ? காரணம் என்னவாக இருந்தாலும், பாடசாலை, கல்லூரி, அலுவலகம் போன்ற பொது இடங்களில் பெண்கள் முக்காடு அணிவதும், ஆண்கள் தாடி வைப்பதும் தடை செய்யப்பட்டது. தடையை மீறுபவர்களை காவல்துறை கைது செய்தது. ஒரு நாளாவது போலிஸ் நிலையத்தில் வைத்திருந்து விட்டு விட்டார்கள். எவராவது பிடிவாதமாக தொடர்ந்து செய்தால், மதத் தீவிரவாதியாக கணிக்கப்பட்டார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் எந்தளவு மகோன்னத நட்பு கொண்டிருந்தாலும், ஆபத்து நேரத்தில் உதவ வர மாட்டார்கள். அமெரிக்காவை, இஸ்ரேலை விமர்சித்து நான் எழுதும் கட்டுரைகளை கடுமையாக எதிர்க்கும் "தமிழர்கள்" இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பென் அலி அளவுக்கு அமெரிக்க/இஸ்ரேல் விசுவாசம் காட்டியிருக்க முடியாது. பென் அலியின் கதை மேற்குலக விசுவாசிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். பென் அலி மட்டுமா அவரது மேற்குலக நண்பர்களால் கைவிடப்பட்டார்? ஈரானில் ஷா, பிலிபைன்சில் மார்கோஸ்.... மக்கள் புரட்சியால் விரட்டப்பட்டு நாடு நாடாக அலைந்தார்கள். எந்தவொரு மேற்குலக நாடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. இன்னும் சில துரதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் வேண்டுமா? பனாமாவில் நொரீகா, ஈராக்கில் சதாம், ஆப்கானிஸ்தானில் பின்லாடன்... இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் சி.ஐ.ஏ. யின் சம்பளப் பட்டியலில் இருந்தவர்கள். முற்காலத்தில் ஆதரித்து அரவணைத்த அதே அமெரிக்கா, பிற்காலத்தில் அவர்களை வில்லன்களாக்கியது. இந்த முன்னாள் அமெரிக்க விசுவாசிகளின் பரிதாபகரமான நிலைமை உங்களுக்கும் வர வேண்டுமா? தாராளமாக அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஆதரியுங்கள்.

0 comments:

Post a Comment