ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் சில நபர்களே கொள்ளை மற்றும் களவுகளில் ஈடுபடுகின்றனர்! யாழ்.படைத்தளபதி

Sunday, 23 January 2011

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் எனக்குப் பணிப்புரை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் எவையும் இல்லை. ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் சில நபர்களே கொள்ளை மற்றும் களவுகளில் ஈடுபடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் காய்ச்சல் ஆரம்பித்துள்ளது. இதனால் தேர்தலைக் குழப்புவதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. இரவு வேளையில் வீடுகளுக்குச் சென்றும் பகலில் வீதிகளிலும் நகைகள் அபகரிக்கப்படுகின்றன. 30 வருடம் நாட்டிலிருந்த பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் ஜனநாயகச் சூழலில் சுதந்திரமாக வாழ்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 300 தமிழ் பொலிஸார் நியமனம் பெற்றுள்ளனர். இதனால் தொடர்பாடல் பிரச்சினை இல்லை. கலாசாரப் பிரச்சினை இல்லை. அனைவரும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸார். இராணுவம் பல பகுதிகளிலிருந்து மீளெடுக்கப்பட்டது. எனினும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு படையினரின் பாதுகாப்பு வேண்டுமென மக்கள் கேட்கிறார்கள்.
யாழ்.மாவட்டத்தில் படையினர் சைக்கிள்களில் வீதி ரோந்தில் ஈடுபடுவர். வீடுகளுக்குச் செல்ல மாட்டார்களே தவிர, சகல பகுதிகளிலும் படையினர் ரோந்தில் ஈடுபடுவர். கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி என்னிடம் ஒன்றை வலியுறுத்தியுள்ளார். கொழும்புக்கு ஒரு பாதுகாப்பு நடைமுறை யாழ்ப்பாணத்திற்கு இன்னொரு பாதுகாப்பு நடைமுறையென்றில்லாமல் சகல மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கை முழுமையாக அமுல்படுத்தி வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும்.
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் மிகைப்படுத்தி வெளியிடுகின்றன. குறிப்பாக அண்மையில் இரண்டு சிறுவர்கள் காணாமல் போனபோது ஊடகங்கள் கடத்தல் எனச் செய்தி வெளியிட்டன. ஆனால் இரண்டு சிறுவர்களும் திருகோணமலைக்குச் சென்றனர். அங்கு மீட்கப்பட்டனர்.
யாழ்.மாவட்டத்தில் சிறு குற்றங்களே நடைபெறுகின்றன. பயங்கரவாதமில்லை. இராணுவ நடவடிக்கை இல்லை. தென்பகுதி மாவட்டங்களைப் போன்று மோசமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் இடம்பெறவில்லை. எனவே பொலிஸாரும், இராணுவமும் சட்டம் ஒழுங்கை முழுமையாக அமுல்படுத்துவர். எனவே விரைவில் யாழ்.குடாநாட்டில் வன்முறைகள் அனைத்தும் முடிபுக்குக் கொண்டு வரப்படும்.
அதற்காக நான் அனைவரினதும் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு 021 222 9693 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்

0 comments:

Post a Comment