இலவச இணைய சேவை: வை-பை வலயங்கள் அறிமுகம்

Monday, 1 August 2011

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்கள்  கம்பயில்லாத இணையச்சேவையான வை-பை (WiFi) வலயங்களாக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் இந்த வலயங்களில் இலவசமாக இணைய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

வை-பை வலயங்களாக மாற்றப்படக்கூடிய இடங்கள் ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொது இடங்களில் அதிகமாக ரயில் நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரசாங்க அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் கடற்கரையோர பிரதேசங்கள் என்பன இதற்குள் உள்ளடக்கப்படவுள்ளன.

வை-பை வலயத்திற்குள் கொழும்பு நகரம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்புக்கான வீதிகள், பேருவளை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பிரதேசங்கள் மற்றும் அருகம்பை முதல் திருகோணமலை வரையான பகுதிகளும் இத்திட்டத்திள் உள்ளடக்கப்படவுள்ளன.

வை- பை வலயங்களாக அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கம் சுற்றுலாப் பயணிகளை கவர்வதுடன், உள்ளூர் பயணிகள் இப்பகுதிகளில் பிரயாணம் செய்யும்போது இலவச இணைய சேவையினை பெற்றுக்கொள்ள வசதியினை ஏற்படுத்துகிறது என்று அனுஷ பெல்பிட்ட குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மின்னஞ்சல்களை வேகமாக பெற்றுக்கொள்ள உதவுவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும் என அவர் தெரிவித்தார். அதேவேளை பெரிய கோப்புகள் மற்றும் ஆவணங்களை தரவிறக்கம் செய்வது மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சுமார் 5 மில்லியன் மக்கள் புரோட்பேண்ட் வழியாகவும் மற்றும் கைத்தொலைபேசி மூலமும் இணையசேவையினை பெற்றுக்கொள்ளகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment