168 ஆண்டு கால பிரபல பத்திரிகைக்கு மூடு விழா!

Saturday, 9 July 2011

பிரிட்டனின் புகழ் பெற்ற பத்திரிகை ஒன்றின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்துள்ளது... பத்திரிகை உலகில் பிரபலமான ரூபர்ட் முர்டோக்கால் நடத்தப்படும், "News of the world', 168 ஆண்டு கால வரலாறு பெற்ற பத்திரிகை.


குற்றம், அரசியல் என எத்தனையோ புலனாய்வு செய்திகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இப்பத்திரிகைக்கு, நாளை மூடுவிழா நடக்கிறது.

பிரிட்டனில் இருந்து வெளிவரும் இப்பத்திரிகை, வழக்கமான பத்திரிகைளின் இணைப்புப் பகுதி சைசில் "டேப்ளாய்டு' என்றழைக்கப்படும் வடிவில், ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிவந்தது.

ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கத் தொடங்கியது. அரசியல்வாதிகள், போலீசார், பிரபலங்கள் என அனைத்து மட்டங்களிலும், லஞ்சமாக பணம் கொடுத்து, தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் தகவல்களை பெற்று செய்திகளை வெளியிட்டது.

லண்டனில், கடந்த 2005ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், ஆப்கன் போரில் கொல்லப்பட்ட பிரிட்டன் வீரர்கள் ஆகியோர் பற்றி போனில் பேசப்பட்ட தனிப்பட்ட விஷயங்களை வெளியிட்டது. தனிப்பட்ட நபர்களின் மொபைல் செய்திகள், தகவல்களை இடைமறித்து தகவல் எடுக்கும் யுக்தி மூலம், பல பரபரப்பு செய்திகளை வெளியிட்டது.
 இது பிரிட்டன் பார்லிமென்டில் மட்டுமின்றி, அந்நாட்டு மக்கள் மத்தியிலும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பத்திரிகையின் வாசகர்களில் பிரபலமானவர்கள், இச்செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். விளம்பரங்கள் கொடுக்கும் நிறுவனங்கள் நிறுத்தின.


பாதிக்கப்பட்டவர்கள் பலர், வழக்கு தொடர்ந்தனர். தற்போது, பார்லிமென்டில் இப்பத்திரிகைக்கு எழுந்த பலத்த எதிர்ப்பையடுத்து, "News of the world' பத்திரிகையின் வெளியீட்டை, நாளையுடன், நிறுத்திக் கொள்வதாக ரூபர்ட் முர்டோக்கும், இவரது மகன் ஜேம்ஸ் முர்டோக்கும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜேம்ஸ் முர்டோக் கூறுகையில்,

"பத்திரிகை மீதான இக்குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சி அளிக்கிறது; வருத்தப்படக் கூடியது. இதுதொடர்பான விசாரணைக்கு, போலீசாருடன் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்' என்றார்.

பிரிட்டன் முன்னாள் துணை பிரதமர் ஜான் பிரஸ்காட்,


"இது முர்டோக்கிற்கு கைவந்தகலை. இப்பிரச்னையில் இருந்து ஒரே அடியாக தப்பித்துக் கொள்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்' என்றார்.


குற்றச்சாட்டு என்ன:


"News of the world' பத்திரிகை முக்கிய தொலைபேசி மற்றும் வாய்ஸ்மெயில்களை ஒட்டுக் கேட்பதாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

கடந்த ஏப்ரல் மாதமும், வாய்ஸ்மெயில் ஒட்டுக் கேட்பு வெளிச்சத்திற்கு வந்தது. பிரிட்டனில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் மில்லி டவ்லர் தொடர்பான விசாரணையை தொலைபேசியில் ஒட்டுக் கேட்டது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த 2007ம் ஆண்டில், இளவரசர் வில்லியமின் உதவியாளரின் தொலைபேசிகளை ஊடுருவுவது தெரிய வரவே, இப்பத்திரிகையின் எடிட்டர் கிளைவ் குட்மேன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீஸ், ராணுவம், அரசு, அரச குடும்பம், 3,000 பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு நட்சத்திரங்கள், இறந்த பிரிட்டன் ராணுவ வீரர்கள் என அனைவரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கு உள்ளான பலரின் பெயரை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

போலீசாருக்கும், இப்பத்திரிகைக்கும் இருந்த தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது. கவ்ல்சன் கைது : "News of the world' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கவ்ல்சன், பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் தொலைபேசி ஓட்டுக் கேட்பு குறித்து பிரிட்டன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவர் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொலைபேசி ஒட்டுக் கேட்பை கவ்ல்சன் மறுத்துள்ளார். பிரதமர் டேவிட் கேமரூனின் முன்னாள் மீடியா உதவியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபர்ட் முர்டோக் யார்? :

ஆஸ்திரேலியாவில் பிறந்த ரூபர்ட் முர்டோக், "நியூஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா, ஆசியா என இவரது வலை விரிந்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல "டிவி' சேனலான "பாக்ஸ் பிராட்காஸ்டிங் கம்பெனி', "சான் ஆன்டோனியா எஸ்க்பிரஸ் நியூஸ்' "ஸ்டார்', "சூப்பர் மார்க்கெட்', "நியூயார்க் போஸ்ட்', "வால் ஸ்டிரீட் ஜர்னல்' மற்றும் ஆஸ்திரேலியாவின் 146 பத்திரிகைகள் என இவரது வலை விரிகிறது. கடந்த 1993ம் ஆண்டில் "ஸ்டார் டிவி'யை வாங்கினார்.

இதன் மூலம் ஆசிய நாடுகளில் காலடி எடுத்து வைத்தார். ஆசியா முழுவதும் "ஸ்டார் டிவி' மூலம் ஆதிக்கம் செலுத்திய முர்டோக்கால், சீனாவில் பெரியளவில் காலடி பதிக்க முடியவில்லை. காரணம் சீன அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது.
 சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது...

0 comments:

Post a Comment