"கடன் அன்பை முறிக்கும்' என்று கேள்விப்பட்டதுண்டு; "சில நேரம், மானம், மரியாதையையும் கெடுக்கும்' என்பது, திருப்பூர் அருகே டீ கடையில் கடன் வைத்த சிலர்
மூலம் உண்மையாகியுள்ளது.
மூலம் உண்மையாகியுள்ளது.
திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் டீ கடை நடத்துபவர் ராஜ். சுற்றுப்பகுதியில் செயல்படும் குவாரி தொழிலாளர்கள், சரக்கு வாகன டிரைவர், கிளீனர்கள் தான் இவரது கடையின் வாடிக்கையாளர்கள். உள்ளூரைச் சேர்ந்த சிலரும் இக்கடைக்கு வந்து செல்கின்றனர். காலை இட்லி, மாலையில் சப்பாத்தி ஆகியன, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
பகல் நேரத்தில் ஒரு ரூபாய்க்கு பஜ்ஜி, போண்டா, வடை போன்ற பலகாரங்களும் கிடைக்கின்றன.கடையின் முன்புறம், உட்புறம் என பல இடங்களில் "கடன் அன்பை முறிக்கும்' என, சாக்பீசால் எழுதப்பட்டுள்ளது.
"யாரும் கடன் சொல்லக் கூடாது' என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் இவ்வாறு எழுதி வைத்துள்ளார், கடை உரிமையாளர் ராஜ். இதுவல்ல ஆச்சரியம்: கடையின் கல்லாப்பெட்டி அருகே, அட்டையில் கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் எழுதி ஒட்டப்பட்டிருந்த விவரம் தான், பலரது புருவத்தையும் உயர்த்திப் பார்க்க வைக்கிறது. வரிசையாக ஒரு சிலரின் பெயரும், குறிப்பாக அவர்களது அடைமொழிப் பெயரும், அதற்கு நேராக ரூபாயில் கடன் தொகையும் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து கடை உரிமையாளர் கூறியதாவது:நெல்லையில் இருந்து இங்கு வந்து, சிறியதாக கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். கடைக்கு வாடிக்கையாக வந்த சிலர், கடன் சொல்லி, சாப்பிட்டனர். பணத்தை கேட்டதும், கடைக்கு வருவதில்லை. அதனால் தான் அவர்கள் பெயரையும், தர வேண்டிய பாக்கியையும் எழுதி வைத்துள்ளேன்.
இந்த பட்டியலில் இருப்பவர்களால் மட்டும் எனக்கு 3,000 ரூபாய் வரவேண்டியுள்ளது.மானம், மரியாதையை கெடுத்தாலாவது, பணம் கொடுப்பர் என்றெண்ணி, கடன் வைத்தவர்கள் பட்டியலை எழுதி வைத்துள்ளேன்.
ஆனால், பட்டியலில் இருக்கும் ஒருவர் கூட, இதுவரை பணம் தரவில்லை. அவமானத்துக்கு பயந்து, தப்பித் தவறி கூட, இந்த பக்கமே அவர்கள் வருவதில்லை.இவ்வாறு உரிமையாளர் கூறினார். எப்படியோ, இனி மேல், அவரது கடையில் யாரும் கடன் சொல்லி சாப்பிடப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
0 comments:
Post a Comment