இலங்கையின் சிறுபான்மை இனங்கள் என்று குறிப்பிடப்படுபவைகளில் தமிழர்களுக்கு அடுத்தது முஸ்லிம்கள் தான். அங்கு வாழும் முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் தமிழ் மொழியையே தாய்மொழியாக கொண்டதால் அவர்களும் தமிழ் முஸ்லிம்கள் என்றே கருதவும், அழைக்கவும் படுகிறார்கள். இலங்கையின் சனத்தொகையில் கிட்டத்தட்ட எட்டு வீதமானோர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இலங்கை முழுவதும் அவர்கள் பரவி வாழ்ந்தாலும் பெரும்பான்மையினர் கிழக்கு மாகாணங்களிலேயே வாழ்கின்றனர்.
இலங்கையின் இனப்பிரச்சனை என்கிறபோதெல்லாம் பெரும்பாலும் தமிழர்கள், சிங்களர்களே குறிப்பிடப்படுகிறார்கள். இலங்கை தமிழ் முஸ்லிம்களும் காட்சியில் உண்டு என்றாலும் அவர்கள் குறித்த கருத்துகளோ அல்லது விமர்சனங்களோ அதிகம் எழுப்பப்படுவதில்லை. ஆனாலும், இலங்கை இனப்பிரச்சனையில் அவர்கள் பங்கெடுத்ததொடு பாதிக்கப்படவும் செய்தார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. இதில் எந்த நிகழ்வு முதல் நடந்தது என்கிற ஆய்வுக்கு கட்டுரையின் முடிவிலுள்ள கனேடிய ஊடகத்தில் வெளியான Dr.Imtiyaz அவர்களின் கேள்வி பதில் இணைப்பிற்கு செல்லவேண்டும். அதற்கு முன் சில விடயங்களை பார்க்கலாம்.
Dr.Imtiyaz தன் கட்டுரைகளில் பல சமயங்களில் வலியுறுத்துவது இலங்கை முஸ்லிம்கள் ஈழத்தமிழர்களின் தனித்தேசிய கோட்பாட்டை ஆதரிக்கப்போவதில்லை என்றுதான். ஈழத்தமிழர்களின் உரிமைப்பிரச்சனைகளை புரிந்துகொண்டு ஒரே இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை என்பதை வலியுறுத்துகிறார். இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடும் ஈழத்தமிழர்களின் தமிழ்தேசிய உரிமைப்போராட்டம் பற்றியும் இங்கே என் பார்வைகளை கொஞ்சம் பகிர்ந்துகொள்கிறேன்.
இலங்கையில் தமிழர்களின் மொழி, அரசியல், பொருளாதார, கல்வி உரிமைகள் அரசியல் யாப்பின் மூலமும் அரசின் கொள்கைகள் மூலமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பறிக்கப்பட்டே வருவதால் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை, தனி தமிழீழம், வலியுறுத்தியே போராடி வருகிறார்கள். இதில் பொதுவாக முஸ்லிம்களின் நிலைப்பாடு இன்றுவரை தெளிவில்லாமலே தொடர்கிறது. தமிழ்த்தேசியத்தை முஸ்லிம் சமூகம் ஆதரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தங்கள் உரிமைகள் அதிகம் பாதுகாக்கப்படும் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருக்கலாம். இலங்கையில் சிங்கள சமூகத்தை தவிர வேறு யாருக்காவது சமவுரிமை இருக்கிறதா அல்லது அது இனியும் கிடைக்குமா என்கிற யதார்த்தபூர்வமான கேள்விகளை தவிர்த்துவிட்டுப் பார்ப்போம்.
பிறிதோர் கட்டுரையில் Dr. Imtiyaz கூற்றுப்படி இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கென்று தாங்கள் தமிழர்கள் அல்லாத ஓர் அடையாளத்தை இஸ்லாம் என்கிற மதத்தின் அடிப்படையிலான ஓர் அடையாளத்தையும், பாதுகாப்பையுமே விரும்புகிறார்கள் என்பதுதான்.
முஸ்லிம் சமூகம் இஸ்லாம் அடிப்படையிலான ஓர் அடையாளத்தை தேடுவது தமிழர்களிடத்தில் கோபத்தை உண்டாக்கியுள்ளது என்று தமிழர்கள் மீது பழிபோட்டு Dr. Imtiyaz தமிழர்கள், முஸ்லிம்கள் இடையேயான முரண்பாடுகளை உண்டாக்க முயற்சிக்கிறாரா என்கிற கோணத்திலும் சிந்திக்க தோன்றுகிறது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலைப்பாடு என்று பார்த்தாலும், இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதியாக இருந்தாலும் அது அவர்களின் சமூகத்திற்கு அதிக நன்மைகள் எதையும் கொண்டுவரவில்லை என்பதே பல முஸ்லிம்களால் முன்மொழியப்படும் ஓர் பொதுவான கருத்து. அரசியல் கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள பெளத்த அரசுடன் கொண்டுள்ள உறவும், அவர்களின் கொள்கைகளுக்கு துணைபோகும் தன்மைகளும் யாரும் அறியாத ரகசியம் அல்ல.
இடதுசாரிகள் உட்பட மற்றைய சில கட்சிகளோடு இலங்கை முஸ்லிம்களை பிரதிநித்திதுவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் 2010 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தச் சட்டத்திற்கு தன் அமோக ஆதரவை வழங்கி இலங்கை சிங்கள பெளத்த ஜனாதிபதியை சகல நிறைவேற்று அதிகாரங்களும் கொண்ட, இரண்டு தடவைகளுக்கு மேல் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாய் இருக்க போட்டியிடலாம் என்கிற ஒற்றையாட்சி முறைக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது.
இருப்பினும் வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூட்டத்தின் போது, பின்னாளில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரான M.H.M. அஷ்ரப் அன்று சொன்னதாக சில முஸ்லிம்கள் சுட்டிக்காட்டுவது மூத்த சகோதரர் அமிர்தலிங்கம் தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுத்தர தவறினால் இந்த இளைய சகோதரன் அஷ்ரப் பெற்றுக்கொடுப்பன் என்கிற கூற்றைத்தான், (Tamil Guardian, "Factual distortions can destroy the fundamentals of a community). இன்று, முஸ்லிம் காங்கிரஸ் அரசியற் போக்கிற்கும் , அன்று மதிப்பிற்குரிய அஷ்ரப் அவர்கள் சொன்னதிற்கும் இடையேயுள்ள இடைவெளி நிறையவே வியக்கவைக்கிறது.
என்னைப் பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் மேற்சொன்ன மதிப்பிற்குரிய அஷ்ரப் அவர்களின் இந்தக்கூற்று Dr. Imtiyaz அவர்களின் கூற்றுக்கு மாற்றுக்கருத்தாக எடுத்தாளப்படுகிறது என்பதைத் தவிர வேறு கண்ணோட்டத்தில் பார்க்கமுடியவில்லை. யதார்த்தம் இன்று வேறுவிதமாய் இருக்கிறது. எங்களுக்காக தமிழ்தேசியத்தைப் பெற்றுத்தாருங்கள் என்பதல்ல தமிழர்களாகிய எங்கள் கோரிக்கை. எங்கள் மறுக்கப்பட்ட உரிமைககளுக்கான நியாயமான அரியல் அபிலாஷைக்கு ஆதரவு கொடுங்கள் என்பதே! எங்களுக்கு மறுக்கப்படும் அதே அடிப்படை உரிமைகள் தானே முஸ்லிம் சமூகத்திற்கும் இலங்கையில் மறுக்கப்படுகிறது. பிறகு எங்கே முரண்படுகிறோம்!
இலங்கை - இந்திய ஒப்பந்தப்படி 1987 இல் தமிழர்களின் தாயக பூமி என்று ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை இலங்கை உச்சநீதிமன்றம் 2006 இல் ரத்துச் செய்ததை முஸ்லிம் சமூகம் மிகவும் சந்தோசமாக வரவேற்கிறது. கிழக்கில் முஸ்லிம் சமூகத்தினர் அதிகம் வாழ்கிறார்கள். வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் தங்கள் சமூகம் சிறுபான்மை ஆகிவிடும் என்பது அவர்கள் வருத்தமும் வாதமும். இலங்கை முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்பவில்லை என்பதை Minority Rights Group International - No war, No peace: the denial of minority rights and justice in Sri Lanka என்கிற அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.
இது ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைபிரச்சனையின் இன்னோர் பரிமாணம்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் வெற்றிபெறாமல் போனபோது நான் சந்தோசப்பட்டது உண்டு. அதுக்கு முக்கிய காரணம் ஒருவேளை அதில் குறிப்பிட்டது போன்று பின்னர் ஓர் வாக்கெடுப்பு நடத்தி வடக்கையும் கிழக்கையும் இணைப்பதா என்றால் முஸ்லிம் சமூகத்தின் பதில் என்னவாய் இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. அன்று வாக்கெடுப்பு நிகழ்ந்திருந்தால் நிச்சயம் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய பூமியான கிழக்கை இலங்கை அரசிடம் அன்றே இழந்தவர்கள் ஆகியிருப்போம்.
ஆனால், இன்றுவரை அரசியல் யாப்பில் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் மூலம் தமிழர்களின் உரிமைகள் ஓரளவுக்கு கிடைக்கும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாடு வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவதால் தங்களுக்கு பாதகமான விளைவுகளே உருவாகும் என்பதுதான். தவிர தொகுதிமுறை பிரதிநித்துவம் கைவிடப்பட்டு விகிதாசாரா பிரதிநிதித்துவ முறைமூலம் பாராளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருக்கிறது என்றும் ஏற்கனவே கவலைப்படுகிறது முஸ்லிம் சமூகம். போர் முடிவுக்கு வந்தபின், அரசியல், பொருளாதாரம், கல்வி, மீள்குடியேற்றம், மக்கள் தொகை கட்டமைப்பு (Demographic Pattern) என்பவற்றின் மூலம் தங்களை கட்டியெழுப்ப உண்டான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும் அவாவோடு செயற்படுகிறார்கள்.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம் சமூகத்திற்கு வியாபாரம், விவசாயம், மீன்பிடித்தொழில், தங்கள் மீள்குடியேற்றம் சம்பந்தமான உத்தரவாதம், செயற்திட்டம் என்பன இலங்கை அரசால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களின் நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள் நிகழ்வதாகவும் அதை அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை என்பதே அரசியல்வாதிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.
கூடவே, ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசு தான் முடிவெடுக்கவேண்டும், சர்வதேசம் விலகியே இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சர்வதேச சூழ்ச்சியில் தங்கள் உரிமைகள் மறுக்கப்படும் என்பது அவர்களது வாதம். ஆனால், இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதில் முஸ்லிம் சமூகத்திற்கே குழப்பம்!!
முஸ்லிம் சமூகத்தால் அடிக்கடி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, தமிழீழ விடுதலிப் புலிகள் தங்களை யாழ்ப்பாணம், வடக்கில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதே. வடக்கிலிருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றினார்கள் என்கிற குற்றச்சாட்டு மட்டுமே வைக்கப்படுகிறதே ஒழிய அதன் பின்னணி காரணங்கள் ஒரு போதும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளப்படுவதில்லை. புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தினரை வெளியேறச் சொன்னது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை யாழ்ப்பணத்தில் முஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கை அரசுக்கு ராணுவ நடவடிக்கைகளுக்கு துணைபோனார்கள் என்பதும். புலிகள் அன்று முஸ்லிம்களை விரட்டியது தவறென்றால் அவர்களுக்கு இதைவிட (May 2009 வன்னி-முள்ளிவாய்க்கால்) அதிகமான உட்சபட்ச தண்டனையை இனி வழங்கமுடியாது.
சமீபத்தில் காலச்சுவடு தளத்தில் படித்த கருணா பற்றியதும் அவர் எப்படி, யாரால் புலிகளுக்கு எதிராக மாற்றப்பட்டார் என்கிற இந்தக்கட்டுரை கூட இங்கு பொருந்திவருமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.
இப்போது தற்காலத்திற்கு வருவோம். அண்மையில் ஓர் கனேடிய ஆங்கில காட்சி ஊடகம் (tvo) ஒன்றின் இணையத்தளத்தில் இலங்கை முஸ்லிம்கள் பற்றி ஓர் கேள்விபதில் முறையிலான ஓர் கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிடப்பட்ட சில மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாத உண்மைகள் என்னை உண்மையிலேயே ஆச்சர்யப்படுத்தின. அதன் இணைப்பு இது.
அதில் குறிப்பிடப்பட்ட ஓர் உண்மை, முஸ்லிம் அறிவுஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் புலிகள் மீதே சுமத்தி, இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தாங்கள் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களுடன் உடனுழைத்ததையும், அவர்களுக்கு தங்கள் இணக்கத்தை வழங்கியதையும் வசதியாக மறந்து போகிறார்கள் என்பது தான். என்னுடைய ஆங்கில மொழி பெயர்ப்பில் ஏதாவது குறை இருந்தாலும் என்பதால் அதன் ஆங்கில வடிவம் கீழே.
"Many Muslim scholars and activists simply put all the blame on the Tamil Tigers while conveniently forget their collaborations and cooperation with the Sinhala political elites since independence".
அதில் மேலும் சொல்லப்பட்ட விடயங்களில் ஒன்று இலங்கையில் போருக்கும் தங்கள் ஆதரவை வழங்கி, புலிகள் அழிக்கப்பட்டதை, அதன் வெற்றியையும் அவர்கள் கொண்டாடினாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் சிங்கள ஆட்சியாளர்களின் போருக்கு முஸ்லிம்கள் துணை போனதை எதிர்த்தார்கள் என்பதே.
போர்க்காலங்களிலும், அதன் பின்பும் முஸ்லிம் அடிப்படைவாதம் வளர்ந்த தன்மையை காணமுடிந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது.
எது எப்படி என்றாலும், இலங்கை வாழ் முஸ்லிம்கள் தாங்கள் தங்களுடைய மத, கலாச்சார அடையாளங்கள் மூலம் தங்கள் தனித்தன்மையைப் பேணவே விரும்புகிறார்கள். தங்களுக்கு அமைதியும், நீதியும் கிடைக்கவேண்டும் என்று விரும்பும் அதேநேரம் தங்கள் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு குறித்தும் கவலை கொள்கிறார்கள் என்பதே அதன் சாரம்.
இலங்கை முஸ்லிம்கள் தங்கள் மத அடிப்படையிலான கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணுவதோடு தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அது அடிப்படை மனித உரிமைகள் சம்பந்தப்பட்டதும் கூட. ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கூறுகள் மேலோங்கி அது பாதகமான விளைவுகளை கொண்டுவருமோ என்றும் அறிவுஜீவிகளால் விசனம் வெளியிடப்படுகிறது.
கூடவே, முஸ்லிம் சமூகம் பேண விரும்பும் மத, கலாச்சார, அரசியல், பொருளாதார உரிமைகள் மூலம் ஈழத்தமிழர்கள் விரும்பும் எங்களின் உரிமைசார் தமிழ்தேசியம் சிக்கிக்கொண்டுள்ளது! அதையும் மறுக்கமுடியாது. அது ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதஉரிமைகள் சார்ந்தது.
மொத்தத்தில் இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாம் அடிப்படையிலான ஓர் அடையாளம், பாதுகாப்பு இரண்டையும் விரும்புவதோடு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பூமியை எந்த தீர்வின் மூலமும் இணைக்கப்படுவதையும் விரும்பவில்லை என்பதே என் புரிதல்.
யார் வேண்டுமானாலும் எந்த அடிப்படையிலும் அவர்களுக்குரிய அடையாளத்தை, உரிமைகளை தக்கவைத்துக்கொள்ளலாம். அது ஒருவர் உரிமை, மற்றவரின் உரிமையை பாதிக்காதவரை தான் சாத்தியம். முரண்பாடுகள், பிணக்குகள் வரும்போது ஓர் பொது தளத்தை அடைய வேண்டியது என்பதும் தவிர்க்க முடியாததாகிறது.
இலங்கை முஸ்லிம்கள் பற்றிய Dr. Imtiyaz இன் கருத்துக்களை ஆர்வம் உள்ளவர்கள் மேற்சொன்ன அந்த இணைப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம். இவரின் முஸ்லிம் சமூகம் பற்றிய கருத்துகளுக்கு வழக்கமாக கூறப்படும் எதிர்க்கருத்தும் மேலே சொன்ன 'Tamil Guardian' (2008) தளத்தில் காணக்கிடைக்கும்.
0 comments:
Post a Comment