1976இல செவ்வாயில் முதன்முதலில் தரையிறங்கிய விண்கலன்கள்.

Wednesday, 9 March 2011

எரிகற்களை வைத்து செவ்வாயில் உயிர் இருக்கிறதா என்று ஆராய்ந்ததை அடுத்து நேரடியாக செவ்வாய்க்கே சென்று உயிரைத்தேடுவது பற்றி விரித்துரைப்போம். ஏற்கனவே சொன்னதுபோல் ஒரு பல ஆராய்ச்சி இழைகளில் ஒரு நூலைமட்டும் வைத்து இக்கட்டுரையை
நெசவுவோம்.
1965இல் ரோந்து வின்கலன் மாரினர் 4, பெர்சிவால் லொவெல் முதலானோர் இருப்பதாய் வலியுறுத்திய ஏலியபுராணம் கட்டுரையை பார்க்கவும்) கால்வாய்களை இதன் பரப்பில் காணவில்லை. 1971இல் மாரினர் 9 முதன்முதலில் வேற்று (செவ்வாய்) கிரகத்தை சுற்றிய செயற்கைகோளானது. பிறகு 1975இல் நாஸா அனுப்பிய வைக்கிங் 1 மற்றும் 2, 1976இல செவ்வாயில் முதன்முதலில் தரையிறங்கிய விண்கலன்கள். செவ்வாயில் உயிர் இருக்கிறதா என்ற நான்கு பரிசோதனைகளை செய்தவையும் இவ்விண்கலன்களே. பார்க்கப்போனால் இதுவரை வேற்றுகிரகத்தில் உயிர் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அறிய செய்யப்பட்ட வெற்றிகரமான பரிசோதனை இது மட்டுமே. மற்ற மார்ஸ்-மிஷன்களெல்லாம் நேரடியாக இக்கேள்விக்கு பதில்கண்டுபிடிக்காத மீடியா திரிபு. இந்த சோதனைகள், முடிவுகள், சச்சரவுகள், பற்றி விவரிப்போம்.

வைக்கிங் செவ்வாய் பிரயாணம். வைக்கிங் மிஷன், நாஸாவின் ஒரு மகத்தான வெற்றிப்பயணம். 1960 தொழில்நுட்ப ரோபோக்கள் சரியாக வேலைசெய்தது. காமிராக்கள் வேண்டியதை செவ்வாயில் சரியாக படமெடுத்தது. நூற்றாண்டுகளாக செவ்வாயில் கால்வாய்கள், செவ்வாயில் மனிதர்கள், செவ்வாயில் ஏலியன்ஸ்கள் என்று ஸ்பெகுலேஷன் துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் வாரபலனாய் அனுகூலமான செய்திவழங்கிவந்த செவ்வாய் கிரகம், முதல்முறையாய் அறிவியலாளர்களுக்கும் வேண்டிய தகவல்களை வைக்கிங்கினால் அருளியது
செவ்வாயில் உயிர் இருக்கிறதா என்பதை ஆராய நாஸா ஸ்பெஷலாய் கார்பன் 14 ஐஸடோப்புகளை சேர்த்து கரி-கூழ் செய்து ஒரு பெரிய அறிவியல் பாத்திரத்தில் இட்டு (அதாங்க குரூசிபிள்) வைக்கிங் விண்கலனில் வைத்து செவ்வாய்க்கு அனுப்பினார்கள்.
பின்னால் வெடிக்கப்போகும் சர்ச்சை பற்றி கணித்திருந்தால் நாஸா இரண்டு பாத்திரங்களை அனுப்பலாம் இல்லை ஒன்றையுமே அனுப்பாமல் மூடிவைக்கலாம் என்றிருப்பார்கள். வருவதை கணித்து நிகழ்காலத்திலேயே சரிசெய்துகொள்ள, அறிவியல் என்ன சாமியார்களாலா நடத்தப்படுகிறது.
கரி-கூழ் பாத்திரத்துடன் கூடவே ஒரு காஸ் குரோமோட்டோகிராஃப் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற பல்லுடைக்கும் பெயர்கொண்ட கருவியையும், மற்றொரு பெயரில்லாத கருவியையும் பொருத்தியிருந்தார்கள். ப-பெ கொண்ட கருவி, செவ்வாயில் மக்கிப்போன உயிரணுக்களிலுள்ள கரிம-மாலிகியூல்கள் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்று உணரும். பெ-இ  கருவி கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை – சத்தாகாரத்துடன் (நியூட்ரியன்ட்ஸ்) உயிர் உறவாடுகையில் வெளிப்படுபவை – கண்டுகொள்ளும்.
பாத்திரத்தில் முன்னமயே கார்பன்-14 சேர்த்தே உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. செவ்வாயில் மைக்ரோப்கள், நுன்னுயிர்கள், இருந்து, அவை பாத்திரத்தில் கரி-கூழுடன் உண்பதுபோல் வேதியியல் உறவாடுகையில் வெளிப்படுத்தும் வாயுக்களில் இந்த கார்பன் 14 கையெழுத்து தட்டுப்படுகிறதா என்றும் இக்கருவிகளால் அறியமுடியும். இதனால் இப்பரிசோதனைக்கு லேபிள்டு ரிலீஸ் (labelled release, LR) சோதனை என்று பெயர்.
ஒருவிதத்தில் இது கிண்ணியில் வாசலில் சாதம் வைத்துவிட்டு, உள்ளிருந்தே காக்கா கரையும் சத்தம் கேட்டால், வெளியிலும் உயிர் இருக்கிறது என்று முடிவுக்கு வருவதைப்போல. ஏனெனில், மைக்ரோப்கள்தான் கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் வாயுக்களை வெளிப்படுத்தியதா என்று மிகநிச்சயமாக தெரியாது. பூமியில் இப்படி நடக்கிறது. நீட்சியாய் செவ்வாயிலும் நடக்கலாம்.
நடந்தது.
ஆமாம்.
செவ்வாயில் வைக்கிங் கொண்டுசேர்த்த ‘கரி-கூழ் உணவு’ பாத்திரத்திலிருந்து வெளிப்பட்ட கார்பன் 14 ஐஸடோப்புகள் அடங்கிய வாயுவை வைக்கிங்கில் பொருத்தப்பட்டிருந்த கருவி கண்டறிந்தது. கூடவே கரி-கூழும் வேதியியல் மாற்றங்களை தெரிவித்தது. சுமார் 160 டிகிரி செண்ட்டிகிரேடிற்கு உஷ்ணப்படுத்தியதும், இவ்வேதியியல் மாற்றங்கள் குறைந்தது, மறைந்தது. இந்த உஷ்ணத்திற்குமேல் மைக்ரோப்கள் சாதாரணமாய் பூமியில் உயிர்வாழ்வதில்லை என்று 1960களில் அறியப்பட்டிருந்தது.
செவ்வாயிலும் மைக்ரோப்கள் உயிர் வாழ்ந்து உஷ்ணத்தினால் செத்து மடிந்த நிகழ்ச்சி மறுஒலிபரப்பு ஆயிற்றா? ஆஹா, அப்படியென்றால் நிஜமாகவே செவ்வாயில் உயிரை கண்டுவிட்டோமா?
நாஸா அப்படி கருதவில்லை.
மிச்ச கருவிகளில் உயிர் இருந்ததிற்கான அ டையாளங்கள் தட்டுப்படாததால் வைக்கிங் செவ்வாயில் உயிர் கண்டுபிடிக்கவில்லை என்றே இன்றுவரை நாஸா கருதுகிறது. எல்-ஆர் (LR) சோதனைகள் ஆதாயமாக தோன்றியதற்கு ரசாயன வேட்கைமிகுந்த செவ்வாயின் காரமான மண்ணே காரணம். இது கரி-கூழுடன் உறவாடியிருக்கலாம். மேலும் அல்ட்ரா-வயலட் கதிரியக்கமும் கரி-கூழிலிருந்து கார்பன்-14 அடங்கிய வாயுக்களை கிளப்பியிருக்கலாம். இப்படி பல காரணங்களை நாஸாவால் திட்டவட்டமாக மறுதலிக்கமுடியவில்லை.
இதுதான் அறிவியலுக்கும் புரட்டிற்கும் வித்தியாசம். முதல் சாதகமான அறிகுறியிலேயே செத்தபிறகும் குட்டித்தாயி பேசுவதாகவும், எங்கேயென்றால் வீட்டுக்கொல்லையில் குதிரை வாயிலாக என்றும் புரட்டு நம்பும், நம்பவைக்கும் (பிறகு நம்பியதற்கு காசு கேட்கும்). அறிவியல் பத்து சாதக அறிகுறிக்கு பிறகும் தட்டுப்படும் ஒரு பாதக யேஷ்யத்தில் தன்னையே திருத்தி தடுக்கிவிழுந்தே முன்னேறும்.
ஆனால் எல்-ஆர் சோதனை மேட்டர் இத்தோடு முடியவில்லை. எல்-ஆர் சோதனையின் வடிவாக்க காரணகர்த்தா கில்பெர்ட் லெவின் (Gilbert Levin)  நாஸா கூறும் காரணங்களை இன்றுவரை ஒப்புகொள்ளவில்லை [paper]. அவர் இன்றும் வைக்கிங் செவ்வாயில் உயிர் கண்டது என்றே கூறிவருகிறார்.கில்பெர்ட் லெவின் இன்று அரிசோனா மாநில பல்கலைகழகத்தில், பியாண்ட் சென்டரில் (beyond center) பேராசிரியர். இங்குதான் ஏலியன்ஸ் பற்றிய ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் கருத்துகளுக்கு எதிர்வாதங்கள்வைக்கும் பால் டேவிஸும் இருக்கிறார் (இவர்கள் கருத்துகளுக்கு,
கில்பெர்ட் லெவின் 1970களிலேயே உயிர்-கரி-கூழ் சோதனையின் நம்பமுடியாத ஊர்ஜிதமற்றதாகக்கூடிய சோதனை முடிவு சாத்தியங்களை அனுமானித்தார். அதற்கான தீர்வையும் சொன்னார்.
இதற்கு முதலில் கைராலிட்டி (chirality) என்ற விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஓரளவு தெரிந்துகொள்வோம்.
கைராலிட்டி என்றால் அங்கலட்சண சமச்சீரற்ற ஒவ்வாமையை நிர்ணயிக்கும் விஷயம் என்று எழுதினால் கன மான மேட்டர் போல இருக்கும். ஆங்கிலத்தில் ஏஸிமெட்ரி என்போமே, அதாங்க சோத்தங்கையா பீச்சாங்கையா என்று நிர்ணயிப்பது. அந்தமேட்டர்தான் கைராலிட்டி.
கைராலிட்டி என்ற வார்த்தைக்கே கிரேக்க மொழி பூர்வீகத்தில் கை-யாலான (ஆங்கிலத்தில் ஹான்டெட்னெஸ்) என்று பொருள்.
உடனே கைராலிட்டி என்பதே தமிழ் கை வார்த்தையிலிருந்து கிரேக்கர் வழியாக பரங்கியருக்கு சென்றுள்ளது என்றெல்லாம் சைடு டிராக் ஓட்டக்கூடாது.
அறிவியலை ஒரு பய  மொழிந்தால், அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.
நம் மனித கையிலிருந்து, கலை, இயற்பியல், வேதியியல், உயிரியல் மாலிக்யூல்கள் என   பல  இடங்களில் கைராலிட்டி விரவியிருக்கிறது. நமக்கு இங்கு தேவை வேதியியல் உயிரியல் கைராலிட்டி மட்டும்.
எனான்ஷியோமெர்கள்(enantiomer) என்று பெயர்கொண்ட வேதியியல் மாலிக்யூல்கள் உள்ளன. இவை துணை மூலக்கூறு (element) அணுக்கள் (atom) இடதுபுறமாகவோ வலதுபுறமாகவோ தாய் அணுவுடன் (parent element atom) சேர்ந்து தோன்றுபவை. ஒரே மூலக்கூறுகள் கொண்ட மாலிக்யூல்தான். ஆனால் கண்ணாடி முன்வைத்த நிஜ,பிரதிபிம்ப தோற்றங்களாக வடிவம்கொள்பவை.
உதாரணமாக நமக்கு பள்ளி அறிவியலில் இருந்தே தெரியும் கார்பன் அணு நான்கு வேறு அணுக்களுடன் சேர்வதற்கு ஏதுவாக வேலன்ஸி (valency) தகுதி உள்ளவை. நான்கு பாண்டுகளும் (bonds) ஹைட்ரஜன் அணுவுடன் என்றால் கிடைப்பது மீத்தேன். இது நடுவில் கார்பனும் சுற்றி கிட்டத்தட்ட சம  இடைவெளிகளில் ஹைட்ரஜனும் விரவியிருக்கும் வடிவம் கொண்ட மாலிக்யூள். கிட்டத்தட்ட சிமெட்ரிக். இதனால் கைராலிட்டி குணத்தை காட்டாது. அ—கைரல் அல்லது நான்-கைரல்.
இதே நான்கு கார்பன் பாண்டுகளும் வேறு வேறான மூலக்கூறுகளுடன் உறவாட முடியும். ஒன்றில் ஹைட்ரஜன், ஒன்றில் நைட்ரஜன் ஹைட்ரைடு (NH2), ஒன்றில் COOH, மிச்சதில் ஒரு இலவச   -மாலிக்யூல்-கொத்து என்று. கார்பனுடன் இ வ்வகை சேர்க்கைகளில்தான் நம் உடலுக்கு இன்றியமையாத அமினோ-அமிலங்கள் கிடைக்கிறது.
ஆனால் இவ்வகை சேர்க்கைகொண்ட மாலிக்யூள், கூம்பு நீண்ட பிரமிட் போன்ற டெட்ரஹெட்ரல் வடிவம் கொண்டவை. கூம்பில் ஹைட்ரஜனும், மற்ற ஓரங்களில் ஏனைய மேட்டர்களும் ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த மாலிக்யூல் சிமெட்ரிக் இல்லை. ஒரே மூலக்கூறுகளை  (elements) கொண்டிருந்தாலும் இருவேறு தினுசில் தோன்றலாம். எனான்ஷியோமெர்கள்.
அதாவது இந்தவகை மாலிக்யூல்கள் கைராலிட்டி குணத்தை வெளிப்படுத்துபவை. படத்தில் பாருங்கள்.
படத்தில் வலது இடது இரண்டிலும் ஹைட்ரஜன் பிரமிட் கூம்பில் இருக்கிறது. NH2, COOH, R என்ற இலவச   -மாலிக்யூல்-கொத்தையும் கவனியுங்கள். R என்ற இ  மா கொத்து COOH சிற்கு வலப்புறமாகவோ இடப்புறமாகவோ கார்பனுடன் ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் ஒன்றில் COOH சிலிருந்து R என்ற இ  மா கொத்திற்கு வலதுபுறமாய் சுழன்று நகர்ந்து செல்லவேண்டும். மற்றொன்றில் இடப்புறமாக. இதனால் ஒரே மூலக்கூறுகளாலான இரண்டு அமினோ-அமில மாலிக்யூலும் படத்தில் காட்டியபடி நிஜ- (கண்ணாடியில்) பிரதிபிம்ப வித்தியாசத்துடன் தோன்றும்.
இரண்டு வடிவங்களுமே வேதியியல் விதிகள்படி சாத்தியமே. எனான்ஷியோமெர்கள்.
ஆனால், ஆச்சர்யமாக உயிரியல் தற்செயல்படி நம் உலகில் உள்ள உயிர்கள் (நம்மையும் சேர்த்துதான்) இடப்புற சுழற்சியுடன் அமைந்த அமினோ அமிலங்களையே ஆதரிக்கின்றன.
ஆதரிப்பது என்றால் இவ்வமிலங்கள் உடலில் (இரசாயன நிகழ்வுகளில்) தோன்றுகையில் இடப்புறம்சுழற்சிகொண்ட வடிவத்திலேயே தோன்றுகிறது. அதேபோல இவ்வுயிர்களின் டி.என்.ஏ. க்கள் டிஆக்ஸி-ரிபோ பெயருக்கேற்றவாறு, வலப்புறம் சுழற்சிகொண்ட நியூக்ளிக்-அமில மாலிக்யூல்கள். இப்படி நம் உலகில் உயிரியல் மேட்டர்கள் ஒருவிதமான சுழற்சியை மட்டுமே ஆதரிப்பதை ஹோமோ-கைராலிட்டி (homochirality) என்கிறோம்.
பூமியின் உயிர்களுக்கு, சக்கரைகள் (டி.என்.ஏ.) வலப்புறம், அமிலங்கள் இடப்புறம்.
(இங்கிருந்து யிங்-யாங், அர்தநாரீஸ்வரர் என்று டேக்-ஆஃப் செய்யலாம். ஆனால் கீழிறங்கி நமக்கு புரிந்த அறிவியலுடனும் அவ்வப்போதாவது பொருத்தவேண்டும். இல்லை விரைவில் அறிவியலாதரவற்ற மாயாவிநோதப்பரதேசியாகிவிடுவோம்).
விஞ்ஞானிகள் இப்படி பூமியில் உயிரியல் தோன்றியிருப்பதே தற்செயல் நிகழ்வு; உயிர் கரிம-வேதியியல் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. பூமியின் தோற்றத்திலிருந்து, உயிர் தோன்றும் சாத்தியங்களை காலம் மறுஒலிபரப்பு செய்தால் வேறுமாதிரி கைராலிட்டி உடைய மாலிக்யூல்கள் மூலக்கூறுகளாலான உயிர்கள் தோன்றலாம் என்கிறார்கள்.
போதும். (விஷயம் மிகுதியாய் தெரிந்த விஷ-மி-களுக்கு: அறிமுகத்திற்காக கைராலிட்டிபற்றி மேம்போக்காகத்தான் கூறியிருக்கிறேன். அறிவியலில் தவறிருந்தால்மட்டும் சுட்டவும். திருத்திவிடுகிறேன்.)
வைக்கிங் உயிர் கரி-கூழ் சோதனைக்கு வருவோம். கில்பெர்ட் லெவின் சொன்ன தீர்வு என்ன?
அவர் செவ்வாய்சென்ற வைக்கிங்கின் “உயிர்-கரி-கூழ் லேபிள்டு ரிலீஸ்” பரிசோதனை ஊர்ஜிதமற்ற முடிவுகளைகொடுக்கும் சாத்தியத்தை 1970களிலேயே உணர்ந்திருந்தார்
கைராலிட்டி குணத்தால் அநேக உயிர்-கரிம-மாலிக்யூல்கள் (ஆர்கானிக் மாலிக்யூல்கள்) ஏதாவது ஒரு சுழற்சியை பெற்றிருக்கவேண்டும் என்று பார்த்தோம். வேதியியல் விதிகள் இவ்விரண்டு சுழற்சிகொண்ட மாலிக்யூல்களை சமமாக பார்ப்பதால், ஒரு இரசாயன மாற்றத்தில் இரண்டுவகை மாலிக்யூல்களுமே தோன்றுவதற்கு சமமான சாத்தியங்களே. ஆனால் உயிரியல்-இரசாயன  மாற்றங்கள் கணிசமான புள்ளியியல் சாதகத்துடன் (statistically significant) ஒருவகை சுழற்சிகொண்ட மாலிக்யூல்களுடன் மட்டுமே நிகழ்பவை என்றும் பார்த்தோம்.
கில்பெர்ட் லெவின் செவ்வாய்க்கு வைக்கிங்கில் கரி-கூழ் கொண்ட இரண்டு பாத்திரங்கள் அனுப்பச்சொன்னார். ஒரு பாத்திரத்தில் இடப்புற சுழற்சி வடிவம் கொண்ட மாலிக்யூல்களிலான அமினோ-அமிலங்களிலான கரி-கூழ். மற்றொன்றில் வலப்புறம் சு-வ  கொண்ட மாலிக்யூல்களிலான அ-அ–க-கூழ்.இதேபோல் இரு பாத்திரங்களிலும் இருவேறு ரூப டி-என்-ஏக்கள்.
செவ்வாயில் பாத்திரங்களில் இரசாயனமாற்றம் நிகழ்ந்தவுடன் இரண்டிலும் சரிவிகிதத்தில், வீரியத்தில், மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் (இதை கண்டுபிடிக்கத்தான் காஸ் குரோமோட்டொகிராஃப் மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் பொருத்தியிருந்தார்கள்) இவை பாரபட்சமற்ற சாதாரண வேதியியல் இரசாயன மாற்றங்களே. செவ்வாயில் நம்மைப்போன்ற உயிர் இல்லை.
ஆனால் ஒரு பாத்திரத்தில் மட்டும் இரசாயன மாற்றம் கணிசமான புள்ளியியல் சாதகத்துடன் அதிக வீரியத்துடன் நடப்பது தெரிந்தால்…
மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்.
கதையின் பிளாக் காமெடி கிளைமாக்ஸ்,
பணம் இடம் போதவில்லை என்று நாஸா ஒரு கரி-கூழ் பாத்திரத்தை மட்டுமே வைக்கிங்கில் அனுப்பியது. இரசாயன மாற்றமும் திவ்யமாக நடந்தது. ஆனால்  விளக்கியது போல், இந்த முடிவை வைத்து மட்டும் செவ்வாயில் உயிர் இருக்கிறதா என்பதை அறிவியல்ரீதியாய் நிரூபிக்கமுடியவில்லை.
வைக்கிங் செவ்வாய்-உயிர் சோதனை இன்றுவரை முடிவுகட்டமுடியாத ஆயாச-வியர்த-விதண்டாவாத மர்மமாய் உலவுகிறது.
ஆகமொத்தம் வைக்கிங் செவ்வாயில் உயிர் கண்டுபிடிக்கவில்லை என்றே நாஸா நிலைப்பாடு கொண்டுள்ளது. வாஷிங்டன்னில் உள்ள யேர் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்தில், வைக்கிங்கின் மாதிரியின் முன்னால் உள்ள அடையாள அட்டையும் இதையே கூறுகிறது (ஒன்பது வருடம் முன்னால் நான் பார்த்தபோதும்).
ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டித்துவிட்டு தொடருங்கள்
நம்மை ஆட்கொள்ள படையெடுக்க செவ்வாய்கிரகவாசிகள் வருகிறர்கள் என்று எச்.ஜீ.வெல்ஸ் ஒரு நூறுவருடம் முன்னால் எழுதியதிலிருந்து, இன்று செவ்வாயில் நுன்னுயிராவது, நேனோபுகளாவது, இருக்கிறதா என்று நாம்தான் விண்கலன் மேல் விண்கலன் அனுப்பி செவ்வாயை படையெடுத்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய செவ்வாயில் உயிர், செவ்வாயில் ஏலியன்ஸ், நிலமை இதுதான்.
2008இல் அனுப்பிய ஃபீனிக்ஸ் உட்பட, இன்றுவரை நாஸா செவ்வாய்க்கு அனுப்பிய வேறெந்த விண்கலனும் செவ்வாயில் உயிரை திட்டவட்டமாய் கண்டுகொள்ளவில்லை. இப்போது 2011இல் மற்றொரு விண்கல படையெடுப்பு ஆயாத்தமாகிக்கொண்டிருக்கிறது. இந்தமுறையாவது கரி-கூழ் பரிசோதனையை சரிவர செய்கிறார்களா பார்ப்போம்.
ஏன் என்ற காரணத்தின் கதவுகளை தட்டினேன், பதிலை தேடியபடி. கதவு திறந்தது. நான் உள்ளேயிருந்தே தட்டியுள்ளது புரிந்தது.
அபாரமான இந்த ஜெலாலுதீன் ரூமியின் (சூஃபி துறவி) கருத்தை ஒத்ததே நம்முடைய ஏலியன்ஸ் தேடலும் என்று தோன்றுகிறது.
எங்கெங்கோ வேறு உயிர்களை, அந்நியர்களை, தேடிக்கொண்டிருக்கிறோம். நம் உலகிலேயே நாம் அல்லாத உயிர்கள், இடப்புற சுழற்சியுடைய சக்கரைகள் வலப்புறம் சுழற்சியுடைய அமினோ அமிலங்களிளாலான, கார்பன் ஆதார பொருளாக இல்லாமல் சிலிக்கன், ஜெர்மானியம் என்று ஆதார-மூலக்கூறுகளுடன், ஒரு நியூக்ளியஸ் தாண்டி இரண்டு நியூக்ளியஸ் கொண்ட உயிரணுவுடனான, இப்படி மாற்று உயிர்கள், இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாய் இன்று அறிவியல்ரீதியாய் உணருகிறோம்.

0 comments:

Post a Comment