தென்னை மரத்தில் ஒளியுடன் கண்களும் தோன்றியது! (காணொளி, பட இணைப்பு)

Thursday 5 May 2011

தென்னை மரத்தில் ஒளியுடன் கண்கள் தோன்றிய அதிசயம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நிகழ்ந்துள்ளது.


உரும்பிராய் மேற்கிலுள்ள ஒருவரின் வீடு அமைந்துள்ள காணியில் இருக்கும் தென்னையிலேயே தற்போது இரண்டு கண்களுடனும் புருவத்துடனும் இவ்வதிசயம் காணப்படுகிறது.

மக்கள் அலையலையாய இதனைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் திருமதி ரமேஸ்வரன் கூறுகையில், 
இந்த தென்னங்கன்றுடன் இன்னும் பல தென்னங்கன்றுகளையும் நட்டிருந்தோம் அதில் குறித்த தென்னையைவிட ஏனைய மரங்கள் காய்க்க தொடங்கி விட்டன.

ஆனால் இது மட்டும் காய்க்கவில்லை. அத்துடன் நோய்த்தாக்கத்துக்குள்ளாகியும் இருந்தது.
இதனால் இதை தறிக்க முற்பட்டபோது தென்னையிலிருந்து ஒளி தென்பட்டது உடனே தறிப்பதை நிறுத்தி விட்டேன்.

அதன் பின் சென்று பார்த்தபோது ஒரு கண் மட்டும் தென்பட்டது.
பின்பு மீண்டும் இரண்டு கண்களும் புருவமும் தென்பட்டது. பின்னர் தென்னங்கன்றின் பின்புறத்திலும் கண்களும் புருவமும் தென்பட்டது என்றார்.

குறிப்பு

இன்று உலகம் தொழிநுட்பப் பாதையில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. செவ்வாயில் மனிதன் சென்று குடியேறுவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கும் காலம் இன்று.

ஆனால் எமது தமிழ்ச் சமூகம் இன்றும், பழைய பண்டிகைகள், பழைய புராணக் கதைகள், மூட நம்பிக்கைகளில் மூழ்கி பின் தங்கிப் போய் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கல் பால் குடித்தல், மரத்தில் அம்மன் உருவம் தெரிதல் போன்றவற்றைப் பார்த்தவுடன் அந்தப் பிரதேசத்தைச் சுற்றி புனிதப் பிரதேசமாக்கி கோயிலும் கட்டிவிடுவார்கள்.

எமது பழந்தமிழ் பல ஆயிரம் அளப்பரிய விஞ்ஞான கருத்துக்கள் மட்டுமல்லாமல், பல வாழ்க்கை குறிப்புகளையும் கொடுத்துள்ளது. அதற்கு உதாரணமாக திருக்குறள், பழமொழிகள் என்பனவற்றைத் குறிப்பிடலாம்.

நாம் எதையும் பார்க்கும் விதத்திலேயே அதன் வடிவம் தெரியும் என்பதற்குப் பல பழமொழிகளை எடுத்துக் கொள்ளலாம். ஓர் அழுக்கான இடத்திலுள்ள நாம் எந்த நோக்கத்தைக் கொண்டு பார்க்கிறோமே அங்கே (பிள்ளையாரோ, அம்மனோ) அந்த நோக்கம் பிரதிபலிக்கப் போகின்றது.

‘கல்லிலே கலை வண்ணம் கண்டான்’ என்னும் ஒரு பாடல் உள்ளது. வெறும் கல்லிலேயே கலைக் கண்களோடு பார்க்கும் போது, அது நாம் நோக்கும் வடிவமாகவே மாறிவிடுகிறது.

எமது முட்டாள் தனத்திற்கும் மூட நம்பிக்கைக்கும் மேலுள்ள செய்தி ஒரு உதாரணமாக அமையலாம். அதாவது, பல மரங்களுடன் நடப்பட்ட இந்தத் தென்னை மரம் மட்டும் காய்க்காமல் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால், மற்றைய மரங்கள் செழித்து வளர்ந்து காய் காய்த்துள்ளது. உண்மையில் சாதாரண மரம் ஒன்று 50 தேங்காய்கள் காய்கும் என்றால் இந்த மரம் 500 தேங்காய்கள் காய்த்திருக்க வேண்டும். அதுதான் அதிசயம் அல்லது அம்மனின் மகிமை.

அல்லது பட்ட மரம் பூத்திருக்க வேண்டும். அதைவிடுத்து இம்மரத்தில் கண் தோன்றியுள்ளதால், அம்மரத்தைப் புனித மரமாகா மாற்றி அதனைச் சுற்றி எல்லையிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும்.

0 comments:

Post a Comment