பின்லேடனின் பங்களா அருகே வீடு எடுத்துத் தங்கிய அமெரிக்க உளவுப்படை அதிகாரிகள்!

Friday 6 May 2011

அமெரிக்காவின் விசேட அதிரடிப்படை வீரர்களால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள பங்களாவில் பல வருடங்களாக தங்கியிருந்தார்.

அவரது இருப்பிடத்தை அமெரிக்கா உளவுபடை கண்டு பிடித்ததும் சில அமெரிக்க உளவாளிகளை அபோதாபாத் அனுப்பி வைத்தது. அவர்கள் பின்லேடன் தங்கியிருந்த பங்களா அருகிலேயே ஒரு வீட்டை எடுத்து பல மாதங்கள் தங்கியிருந்தார்கள்..

அந்த வீட்டிலிருந்த படி பின்லேடன் தங்கியிருந்த பங்களாவை பல மாதங்களாக கண்காணித்தனர். தாங்கள் வெளியில் சென்றால் சந்தேகம் ஏற்படும் என்பதால் அதி நவீன கருவிகளை உளவு பார்க்க பயன்படுத்தினர்.

டெலிபோட்டோ லென்சுகள் அடங்கிய அதி நவீன கேமராக்களை பயன்படுத்தியும், புற ஊதா கதிர்களால் செயல்படும் கருவிகளை பயன்படுத்தியும் பின்லேடன் பங்களாவை உளவு பார்த்து தகவல்களைச் சேகரித்தனர்.

பின்லேடன் பங்களாவில் இருந்து பேசும் உரையாடல்களை மிக நுண்ணிய ஒலிக்கருவிகளை பயன்படுத்தி ஒட்டு கேட்டனர். பின்லேடன் தப்பிக்க பங்களாவில் சுரங்கபாதை உள்ளதா? என்று செயற்கை கோள் மூலம் கண்காணித்தனர்.

இவ்வளவு நுணுக்கமான கருவிகளை உளவு துறை வரலாற்றில் இது வரை எந்த நாடும் பயன்படுத்தியது கிடையாது என்று அமெரிக்க உளவியல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக பின்லேடன் பதுங்கியிருப்பதை அமெரிக்கா கண்டு பிடித்துவிட்டது.

அவர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. அமெரிக்க உளவாளிகள் தங்கியிருப்பது பின்லேடனுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் உளவு துறைக்கும், உள்ளூர் போலீசுக்கும் தெரியக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் அவதானத்துடனும் செயற்பட்டனர்.

பின்லேடன் பங்களாவுக்கு உயரமான மர்ம நபர் ஒருவர் அடிக்கடி வந்தார். அவர் தான் பின்லேடனா? என்பதை கண்டு பிடிப்பதிலும் சில சமயம் சிக்கல் ஏற்பட்டது. உளவாளிகளுக்கு பின்லேடனை உளவு பார்க்கும் பணி மட்டுமே வழங்கப்பட்டது.

அவர்கள் அதனை திறம்படச் செய்தனர். அவர்கள் உறுதி செய்த பின்பு கப்பல் படை கமாண்டோ பிரிவிடம் தாக்குதல் நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் கச்சிதமாக தாக்குதல் நடவடிக்கையை முடித்துவிட்டனர். இது அமெரிக்க உளவுப் பிரிவின் திறமையை எடுத்துக் காட்டுகிறது.

0 comments:

Post a Comment