நம் உலகிலேயே நாம் அந்நியர்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.

Wednesday 9 March 2011

எங்கெங்கோ வேறு உயிர்களை, ஏலியன்ஸை, அந்நியர்களை, தேடிக்கொண்டிருக்கிறோம். இதற்கு முன், நம் உலகிலேயே நாம் அல்லாத உயிர்கள், மாற்று உயிர்கள் (alternate life), கொண்ட நிழல் உயிருருளை (shadow biosphere) தழைத்திருக்கலாமே என்று இன்று அறிவியல்ரீதியாய்
உணருகிறோம். இடப்புற சுழற்சியுடைய சக்கரைகள் வலப்புறம் சுழற்சியுடைய அமினோ அமிலங்களிளாலான, கார்பன் ஆதார பொருளாக இல்லாமல் சிலிக்கன், ஜெர்மானியம் என்று ஆதார-மூலக்கூறுகளுடன், ஒரு நியூக்ளியஸ் தாண்டி இரண்டு நியூக்ளியஸ் கொண்ட உயிரணுவுடனான, இப்படி பல வகைகளில் மாற்று உயிர்களை அனுமானிக்கலாம்.
எப்படி என்று விளங்கிக்கொள்ள முதலில் சுருக்கமாக நம் போன்ற உயிர் எதாலானது என்று பார்ப்போம்.
நாம் வேதியியல் பாதி உயிரியல் மீதி என்று கடவுள் பாதி மிருகம் பாதியாய் கலந்து செய்த கலவை. இன்று ஹோமோஸேப்பியன்ஸ் என்று அறியப்படும் நம் மனிதகுலத்தின் மூதாதையரும், மனிதக்குரங்கின் மூதாதையினரும் ஒரே பொது ஆதி-மனித-குரங்கு-மூதாதையினரிடமிருந்து தோன்றியவர்கள். இந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் புரிதலை (கொம்பேறித்தாவும்) குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிற சினிமா பாட்டில் விளக்கியுள்ளோம்.

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் (Richard Dawkins) தன் மூதாதையினரின் கதை (The Ancestor’s Tale) என்கிற குண்டுபுஸ்தகத்தில் இவ்வகையில் பொது-மூதாதையினரை common ancestor என்பதின் சுருக்கமாய், கொன்செஸ்டர் (concester) என்கிறார். நாம் (பொது மூதாதையர் என்பதை) பொதுவாதையர் எனலாம்.
இவ்வகையில் மனிதனிலிருந்து நாற்பது பொதுவாதையர் பின்னோக்கிச்சென்றால், நான்கு பில்லியன் வருடங்கள் முன்னர் பூமியில் தோன்றிய முதல் உயிரை அடையலாம். அதாவது, பாக்டீரியாக்களைவிட எளிமையான, நுண்ணுயிர்கள். இவைதான் செவ்வாயிலிருந்து பூமிக்கு எரிகல் சவாரியில் வந்தவையோ என்று நாம் கருதும் உயிர்கள்.

அருகிலுள்ள உயிர்-மரம் படம் முதல் பொதுவாதையரான எளிமையான சாதா உயிரிலிருந்து கிளைகளாய் பல  உயிரினங்கள் தோன்றியுள்ளதை விளக்குகிறது. பாக்டீரியா, யூகரியா, ஆர்கேயியா என்று மூன்று முக்கிய வம்சாவளியாய் உயிரினம் அனைத்தும் பிரிவதை கவனியுங்கள்.
ஆர்கேயியா எனப்படுபவை நுண்ணுயிர்கள், மைக்ரோபுகள். புரோகரையோட் (prokaryote) என்றும் வகுப்பார்கள். அதாவது, இவைகள் ஒரு-உயிரணு ஜீவன்கள். இவற்றின் உயிரணுவில் சிக்கலான உட்பிரிவுகள் கிடையாது. செல் நியூக்ளியஸ் ஜவ்வுகள் (cell nuclear membrane) மற்றும் செல் நியூக்ளியஸ் எனும் உயிரணுவின் உட்கரு கிடையாது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், உட்கருவில்தான் நமக்கெல்லாம் மரபணுக்கள் குரோமோஸோம் கட்டுக்களில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆர்கேயியா என்று வகுக்கப்படும் இந்த எளிமையான உயிர்களுக்கு அநேகமாக ஒரே சுருள் மரபணுதான் இருக்குமாம் (பிளாஸ்மிட்ஸ் plasmids என்பதை இப்போதைக்கு சாய்ஸில் விட்டுவிடுவோம்). இது நியூக்ளியாயிட் (nucleoid) என்று செல் உள்ளேயே சுருட்டிவைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆர்.என்.ஏ. (RNA) எனப்படும் ரிபோ நியூக்ளிக் அமிலங்கள் ஆர்கேயியாவின் செல்களில் இருக்கும். தனித்தனியாக உயிரணு உட்சுவர்கள்கொண்ட, மைட்டோகாண்டிரியா, லைஸசோம் கோல்கை உருப்புகள் என்றெல்லாம் கிடையாது. அரிதாக சிலது ஓர்-உயிரணு நுண்ணுயிர்களாய் ஜீவிக்கிறது. இயற்கையிலிருந்து ஆற்றலை உறிஞ்சி தங்களையே பிரதியெடுத்துக்கொள்ளமுடியும். அவ்வளவே.
ஆனாலும், உயிர் மரத்தில் இவைகளிலேயே எத்தனை வகைகள் கவனியுங்கள். அனைத்துமே ஒருவகையில் நமக்கு பல  மில்லியன் வருடங்களுக்கு முன்னாலிருந்து இவ்வுலகில் வசிக்கும் நம் பொதுவாதையர்களே. இவற்றில் பலவகை நம்மால் ஜீவிக்கமுடியாத தட்பவெட்பசூழ்நிலைகளில் வசிக்கமுடியும். உதாரணமாக ஹலோஃபைல் (halophile) எனப்படுபவை உப்பு அதிகமாக இருக்கும் சூழலில் (கடல் நீர்) உடம்பெல்லாம் அரிக்கிறதே என்று குறையின்றி வசிக்குமாம். தெர்மோஅஸிடோஃபைல்ஸ் (thermoacidophiles) சுமார் 110 டிகிரி செல்சியஸ் உஷ்ணமான இடங்களிலும் வசிக்குமாம். கடலுக்கடியில் கனன்றுகொண்டிருக்கும் எரிமலைகளில் இவற்றை கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலே படம், extremophiles எனப்படும் இவ்வகை கிருமிகளே, Yellow Stone National Parkஇல் உள்ள ஊற்றின் நிறங்களை தோற்றுவிக்கிறதாம்.
அடுத்து பாக்டீரியாக்கள் என்று ஒரு பெரும் வம்சாவளிக்கிளை இருக்கிறதே, இதில் உள்ள அனைத்து உயிரினமும் யூகரையாக்களைக்காட்டிலும் சிக்கலானவை. ஆனாலும் இவைகளும் புரோகரையோட் (prokaryote) வகுப்பே. சிக்கலான பல்வகை உயிரணுக்கள் கொண்டதாக இருக்கலாம். ஆனால் இவற்றின் உயிரணுக்களிலும் உட்பிரிவுகள் கிடையாது. செல் நியூக்ளியஸ் நஹி. ரிபோஸோம்கள், ஆர்.என்.ஏ.க்கள் உண்டு.  பிரதியெடுத்து சந்ததிபெருக்குவதைத் தவிர, இவற்றில் சில, புணர்ந்தும் அடுத்த தலைமுறையை தோற்றுவிக்க வல்லது. மற்ற யூகரியாக்களின் சுவாசத்திலும், வயிற்றிலும், கிட்னியிலும் கூட இவை வசிக்கும்.
பாக்டீரியாக்கள் பல்கியிருந்தாலும், இவைகள் அனைத்தும் சிக்கலான மூளை அமைப்பை கொண்டதல்ல. சில எளிமையான காரியங்களே இந்த உயிரினங்களினால் செய்யமுடியும். வாழைப்பழத்தோலில் சறுக்கிவிழுவது, அதைப்பார்த்து சிரிப்பது, காதலனைக்கண்டதும் காலால் கோலம் போடுவது  போன்றவற்றை செய்யமுடியாது. இவ்வளவு ஏன், இவற்றில் பலதிற்கு photosynthesis (தாவர ஒளி இயைபாக்கம்) என்று சூரிய ஒளியிலிருந்து ஆற்றலை நேரடியாக உறிஞ்சி உபயோகிக்கும் திறன்கூட கிடையாது (சயனோபாக்டீரியாவிற்கு photosynthesis முடியும்).
இந்த மாதிரியெல்லாம் செய்யமுடிந்தவை யூகரியாக்கள். சிக்கலான மூளை அமைப்பை கொண்ட விலங்கினங்கள் அனைத்தும் இந்த வம்சாவளியில் அடக்கம். ஆச்சர்யமான  விஷயம், உலகின் மொத்த ஜீவராசிகளை கணக்கில்கொண்டால் யூகரியாக்களுக்கு  அருதிப்பெரும்பான்மையே கிடைக்காது என்பது தெளிவு. இந்த வம்சாவளியில்தான் அப்படி இடதுகை ஓரமாக பாருங்கள், தாவரங்கள், காளான்கள் என்றெல்லாம் போக, ஹோமோ என்று பெயரிட்டு ஒரு கோடு இருக்கிறதே. அதில் சுமார் ஐம்பதாயிரம் வருடங்கள் முன்னர் வாழ்வைத் தொடங்கினான் ஆதிமனிதன்.
புணர்ந்தான். சந்ததிபெருக்கினான். பாக்டீரியாக்கள் அகரியாக்களை சுவாசித்தான், தன் சகோதர யூகரியாக்களை கொன்று உண்டு கொழுத்தான். சுத்தியல் கண்டான். அதை அடித்து ஆர்டர் ஆர்டர் என்று அரைகூவினான். காதலித்தான். ஆதிமனிதன் காதலுக்கு பின் அடுத்த காதலும் இதுதான் என்று பாட்டெழுதினான்.
***
உயிர் என்ற மகத்தான விஷயத்தை சில பத்திகளில் சுருக்கமாக சொல்ல முற்படுவதால் பல  கேள்விகள் உங்களுக்கு இங்கு உதிக்கும். உதாரணமாக செடிகொடிகளும், விலங்குகள்போல், சிக்கலான உயிர்தான். யூகரியாக்கள் எனப்படும் பல -செல், சிக்கலான யோசனைகள் செய்யக்கூடிய மூளை உடைய ஜீவராசிகள். சில மில்லியன் வருடங்கள் முன்னால் யூகரியா வம்சாவளியில் நெருக்கமான பொதுவாதையர்கள் கொண்டவர்கள் என்பதால், பட்டாம்பூச்சி, உருளைக்கிழங்கு, மனிஷாகொய்ராலா என்று சகட்டுமேனிக்கு இணைத்து பொதுவான சில மரபணுக்கள் தட்டுப்படுவது இன்றைய ஜெனோமிக்ஸ் நிதர்சனம்.
மாற்று உயிரை விளக்க, உயிர் பற்றி இந்தச் சிறு அறிமுகம் போதும். நிறுத்திக்கொள்வோம்.
நாம் இ துவரை கண்டறிந்து மேலே உயிர்மரத்தில் பட்டியலிட்டுள்ள உயிரினங்களில் சில பொதுவான அம்சம் உள்ளது. இவை அனைத்துமே கார்பன் கரி சார்ந்த உயிரினங்கள். அதாவது இவைகளின் டி.என்.ஏ.களை பிரித்தால், சாதாரணமாக அடினைன், குவனைன், சைடோஸைன், தையமின் என்று நான்கு நியூக்ளிக் அமிலங்கள் இருக்கும். இந்த அமிலங்கள் கார்பன், ஆக்ஸிஜன் ஹைட்ரஜன் நைட்ரஜன் பாஸ்பரஸ் என்று மற்ற மூலக்கூறுகளுடன் சேர்ந்து கட்டப்பட்டவை. நம் உயிரினங்களில் மரபணுக்களில் பலவகை அமினோ அமிலங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்துமே கார்பன் கொண்டு ஆக்கப்பட்டவை. இது ஒரு பொது அம்சம்.
அதேபோல, எந்த ஜீவராசியின் உயிரணுவில் உள்ள செல் நியூக்ளியஸ் என்றாலும், அது ஒவ்வொரு செல்லிலும் ஒன்றுதான் இருக்கிறது.
அதேபோல், ஏற்கனவே செவ்வாயில் உயிர் பகுதிகளில் homochirality என்று விளக்கியதைப்போல, பூமியின் உயிர்களுக்கு, சக்கரைகள் (டி.என்.ஏ.) வலப்புறம் சுழற்சிகொண்ட மாலிக்யூல்கள். சேர்ந்து இயங்கும் அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சிகொண்ட மாலிக்யூல்கள்.

0 comments:

Post a Comment