பதவி விலக கடாபி திட்டவட்ட மறுப்பு (வீடியோ இணைப்பு)

Wednesday 23 February 2011




லிபியா கலவரத்தில் 2 ஆயிரம் பேர் பலியானதை தொடர்ந்து தெருக்களில் பிணங்கள்
சிதறி கிடக்கின்றன. லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கும்படி ராணுவத்துக்கும், போலீசுக்கும் கடாபி உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவமும், போலீசும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொடக்கத்தில் பென்காஷி, டிரிபோலி ஆகிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பென்காஷியில் போராட்டத்தில் பலியானவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர்கள் மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் பலியாகினர்.
அதை தொடர்ந்து டிரிபோலியில் போராட்டக்காரர்கள் மீது போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டு வீசப்பட்டது. இதிலும் எராளமானோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் இதுவரை 233 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவதில் ராணுவமும், போலீசும் தீவிரமாக உள்ளது. ரோட்டில் கூடுபவர்களை அடித்து உதைத்து துப்பாக்கியால் சுட்டும் வருகின்றனர். எனவே ரோட்டில் கிடக்கும் பிணங்களை தூக்கி சென்று இறுதி காரியங்கள் நடத்த மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் தெருக்களில் கேட்பாரற்று பிணங்கள் சிதறி கிடந்தன. இருந்தும் போராட்டம் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது.

இதற்கிடையே அதிபர் கடாபி வென்சுலாவிற்கு தப்பி ஓடி விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இதை அந்நாடு மறுத்தது. இந்த நிலையில் அதிபர் கடாபி டெலிவிஷனில் தோன்றி பேசினார். அப்போது நான் எங்கும் தப்பி ஓடவில்லை. லிபியாவில் தான் இருப்பேன். எனக்கு எதிராக சிலர் வதந்தியை பரப்புகின்றனர். அதை மக்கள் நம்ப வேண்டாம். போராட்டத்தைகை விட வேண்டும். இல்லாவிடில் லிபியா தெருக்களில் மேலும் ஏராளமானவர்களின் பிணங்களை சேகரிக்க வேண்டியது இருக்கும். நாட்டுக்காக உயிர் துறக்கும் தியாகியாக இருப்பேனே தவிர பதவி விலகவோ நாட்டை விட்டோ ஓட மாட்டேன் என்று பேசினார்.

0 comments:

Post a Comment