விலங்குப் பண்ணையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பணிப் பெண்

Tuesday 15 February 2011

சவூதி அரேபியாவில் ஒதுக்குப் புறம் ஒன்றில் உள்ள விலங்குப் பண்ணை ஒன்றில் எஜமானர்களால் கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டு வந்த இலங்கைப்
பணிப் பெண் ஒருவரை தூதரக அதிகாரிகள் மீட்டு உள்ளனர். 

பாத்திமா அசீரா (வயது-43) என்பவர் வீட்டுப் பணிப் பெண் வேலைக்காக கடந்த செப்டெம்பர் மாதம் சவூதி வந்து சேர்ந்தார். 

ஆனால் வீட்டு வேலைகளுக்கு மேலதிகமாக விலங்குப் பண்ணை ஒன்றில் பணியாற்ற வேண்டும் என்று எஜமானர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார். 

இப்பண்ணையில் சுமார் நூற்றுக்கணக்கான வளர்ப்புப் பிராணிகள் உள்ளன. இவர் பயங்கரமான குளிருக்குள்ளும் பண்ணையில் மிருகங்களோடு இராப் பொழுது முழுவதையும் கழிக்க வேண்டி இருந்தது. 

காலையில் 5.00 மணிக்கு பண்ணைக்கு செல்ல வேண்டும். விலங்குகளுக்கு வாகனம் ஒன்றில் இரை வரும். இந்த இரை முழுவதையும் தனி ஒருவராக வாகனத்தில் இருந்து இறக்க வேண்டும். 

விலங்களுக்கு இரை கொடுக்க வேண்டும். பண்ணையை துப்புரவு செய்ய வேண்டும். அதிகாலை 10.00 மணிக்குள் எஜமானரின் வீட்டுக்கு செல்ல வேண்டும். இவை இவரின் நாளாந்த கடமைகளில் பண்ணை சார்ந்தவை. 

அதன் பின் வீட்டில் சமைக்க வேண்டும். எஜமானர்களின் உடுப்புக்களை தோய்க்க வேண்டும். வீட்டை துப்புரவு செய்ய வேண்டும். எஜமானர்களின் குழந்தைகளை பராமரிக்க வேண்டும். இவர் இருமலுடன் இரத்த வாந்தி எடுக்க தொடங்கி இருக்கின்றார். 

பண்ணையில் உள்ள மிருகங்கள் மூலம் கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கடந்த 30 நாட்கள் சிகிச்சை பெற்று வந்து இருக்கின்றார். 

கடும் குளிருக்கு மத்தியில் திறந்த பிரதேசம் ஒன்றில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தமையால் இவர் நோய் வாய்ப்பட நேர்ந்து இருக்கின்றது என்று வைத்தியர்கள் சொல்லி இருக்கின்றனர். 

இவரின் கைகள், கால்கள் குளிர்க் கொடுமையால் மரத்து விட்டன. சவூதியில் உள்ள இலங்கைத் தூதுரகத்தைச் சேர்ந்த தொழிலாளர் நலன் பேணும் அதிகாரி சுனில் விஜேசிங்க இப்பெண்ணை நேரில் சென்று வைத்தியசாலையில் பார்வை இட்டார். 

வீட்டுப் பணிப் பெண்ணாக வந்தவரை விலங்குப் பண்ணையில் வேலைக்கு அமர்த்தியமை தொழில் சட்டத்துக்கு முரணானது என வாதாடினர். 

நீண்ட பிரயத்தனத்துக்கு பின் வைத்தியசாலையில் இருந்து இப்பெண்ணை தூதரகம் பொறுப்பெற்று உள்ளது. ஆயினும் பெண்ணின் உடல் நிலை திருப்திகரமாக இல்லை. 

இவர் தற்போது தலைநகர் ரியாத்துக்கு கொண்டு வரப்பட்டு தூதரகத்தின் நேரடி மேற்பார்வையில் வைத்தியசாலை ஒன்றில் தொடர் சிகிச்சை பெறுகின்றார்

0 comments:

Post a Comment