சாமி வருவது பக்தியா...

Saturday 29 January 2011

ஊரே அந்த மைதானத்தில் கூடியிருக்கிறது. லவுட் ஸ்பீக்கர் உச்சபட்ச ஒலியில் அம்மன் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. சிறுவர்கள் அடங்காத ஆர்வத்துடன் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். 'போங்கடா, தள்ளிப் போங்கடா' என்று அவர்களை விரட்டுகிறார் பூசாரி. அவர் கையில் இருக்கும் பம்பை படு வேகமாக ஒலிக்கிறது. சிறுவர்கள் காதில் போட்டுக்கொள்ளாமல் கூட்டத்தைப் பார்த்தபடி நிற்கிறார்கள். உடுக்கைக்காரர்களும் வேகமாக உடுக்கை அடிக்கிறார்கள். அந்த இடமே பக்திப் பரவசத்துடன்
கூட்டத்தின் பரவசம் அதிகரிக்கிறது. அனைவரும் கையெடுத்துக்
கும்பிடுகிறார்கள். 'யாரு தாயி வந்திருக்கிறது..?' என்று கேட்கிறார் பம்பை அடிக்கும் பூசாரி.

'நான்தாண்டா மாரியாத்தா வந்திருக்கேன்...' & கர்ஜனையாக வருகிறது பதில்.

'தாயீ... இங்கே நடக்கிறது எல்லாம் சம்மதம்தானே ஆத்தா?'

'சம்மதம்டா...'
'குத்தம் குறை ஏதாவது இருக்கா... கெடாவ வெட்டி கூழ் ஊத்தலாமா தாயி..?' என அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, 'பூவாத்தா வந்திருக்கேன்...', 'நாகாத்தா வந்திருக்கேன்...', 'முத்தாலம்மா வந்திருக்கேன்...' என்று பத்துப் பதினைந்து பெண்கள் கூட்டத்திற்கு முன் வந்து ஆடத் தொடங்கிவிட்டார்கள். ஓரிரு ஆண்களும் சிறுவர்களும்கூட ஆட ஆரம்பித்து விட்டார்கள்.

பம்பை அடிப்பவர் பய பக்தியுடன் ஒவ்வொரு சாமிக்கும் மஞ்சள் தண்ணீர் கொடுத்து, கற்பூரம் ஏற்றி நாக்கில் வைத்ததும் அவர்கள் மயங்கி கீழே சரிகிறார்கள்.

ஆடி மாதத்திலும் சித்திரையிலும் தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் சகஜமாகப் பார்க்கக்கூடிய காட்சி இது. ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோயில்கள் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். வாரா வாரம் கூழ் ஊற்றுவதும், தீமிதியுமாக ஏராளமான நிகழ்ச்சிகள் கோயில்களில் நடக்கும். அப்படி நடக்கும் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம், பெண்களுக்கு சாமி வருவது. இப்படி சாமி வருவது எதனால்? இது உண்மையா, பொய்யா? சாமி வருவதற்கு ஆன்மிகக் காரணம் இருக்கிறதா அல்லது இது மருத்துவப் பிரச்னையா?

வெளியிலிருந்து இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்விகள் எழுவது இயல்புதான். சாமி வருவது பற்றிக் கேட்டாலே சாமி குத்தம் என்று சொல்லி நம் வாயை மூடிவிடும் பக்தர்களும் இருக்கிறார்கள். என்றாலும் இந்தக் கேள்விகளுக்கு விடை காண நம் ஆராய்ச்சியைத் தொடங்கினோம்.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த சாமியார் செல்வகுமாரிடம் பேசினோம்... ''கடவுள் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு உண்மைதான் சாமி வருவதும்'' என்று ஆரம்பித்தார் செல்வகுமார். ''ஆனால் அது அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மட்டும்தான் இருக்கும். நீங்கள் பார்ப்பது போல மிக ஆக்ரோஷமாகக் கத்துவது, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இருப்பது எல்லாம் பொய்!'' என்கிறார் அவர்.

'இது எப்படி ஏற்படுகிறது' என்று கேட்டால் ஆச்சரியமாக விஞ்ஞானம் பேசுகிறார் சாமியார். ''எல்லா மனிதர்களின் உடலிலும் எக்டோபிளாசம் என்னும் மின்காந்த அலைகள் இருக்கும். இது நம்மைப் பாதுகாக்கும் வளையம். இந்த அலைகள்தான் சாமி வரும்போது உடலை உலுக்கி எடுக்கிறது'' என்கிறார்.

'பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி?'

''பெண்கள் இயற்கையிலேயே அதிக பக்தியுடன் இருப்பதாலும், கன்னிப் பெண்களாக இறந்து போனவர்களை பூவாடைக்காரி என்று சொல்லி வழிபடுவதாலும் சில நேரஙகளில் அவர்கள் மீது சாமி வருகிறது. இது அம்மனை வழிபடும் பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறது. அது பெண் தெய்வமாகவே இருக்கும். இது நரம்பு சம்பந்தப்பட்ட நோய்போல. அதனால்தான் அந்த சமயத்தில் மஞ்சள் தண்ணீர் கொடுத்தால் நரம்புகள் இயல்பு நிலைக்கு வரும்.''

'அப்படியானால் கற்பூரச் சூட்டை எப்படித் தாங்குகிறார்கள்?'

''இயல்பிலேயே நாக்கிற்கு சூடு தங்கும் குணம் இருப்பதால் கற்பூரத்தின் சூட்டைத் தாங்குகிறது'' என்கிற செல்வகுமார், ''தான் வாழும் பகுதியில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பும் பெண்களுக்குக்குத்தான் இது அதிகம் ஏற்படுகிறது'' என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

பெண்களுக்குக் குடும்பத்தில் ஏற்படும் மன அழுத்தம்தான் சாமி வரும் செயலாக வெளிப்படுகிறது என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. இதுகுறித்து மனநல மருத்துவர் நப்பின்னையிடம் கேட்டோம்.

''பெண்களுக்கு சாமி வருவதற்குக் காரணம் மன அழுத்தம்தான்'' என்று அழுத்தமாகச் சொல்கிறார் அவர். ''மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பிரச்னையை சமாளிக்கத் துணிவில்லாத பெண்களுக்கும்தான் இது அதிகம் வருகிறது'' என்கிறார் நப்பின்னை.

'ஆண்களுக்கு சாமி வருவது ஏன் குறைவாக இருக்கிறது?' என்று கேட்டதும் நப்பின்னை சமூக ரீதியான காரணங்களை அடுக்குகிறார்.

''நம்முடைய சமூகம் ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடாது என்று சொல்லி பெண்களை வளர்க்கிறது. என்ன நடந்தாலும் பொறுத்துத்தான் போக வேண்டும் என்றும் சொல்கிறது. இதை மீறித் தன்னுடைய கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தும் பெண்களின் மீது பல பழிகளைச் சுமத்துகிறது. இதனால் இவர்கள் பயப்படுகிறார்கள். தன்னுடைய கணவர், அவரது குடும்பத்தினர் தனக்கு இழைக்கும் கொடுமைகளை தைரியமாக எதிர்க்க முடியாது. எனவே அவர்கள் கடவுளைத் துணைக்கு அழைக்கிறார்கள். சாமி என்றால் அனைவருக்கும் பயம்தான். சாமி வரும் நேரத்தில் ஒரு பெண் சொல்வதை அந்தக் குடும்பம் ஏற்றுக்கொள்கிறது. அவளை மதிக்காத மாமியார், கணவர் எல்லாரும் அவள் காலில் விழுந்து வணங்குகிறார்கள். இதனால் அவள் திருப்தி அடைகிறார்கள். அவ்வளவுதான்!

அந்த சமயத்தில் அவர்களுக்கு அளவுக்கு அதிகமான தைரியம் வருகிறது. இந்த தைரியம் எதனால் வருகிறது என்பது மட்டும் இன்றுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் நெருப்பு மிதித்தல் அலகு குத்துதல் என அத்தனை வலியையும் தாங்கிக்கொள்கிறார்கள். இயல்பான மனநிலையை விட்டு வெளியே போகும்போது தங்களுக்கு என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒருவிதமான தற்காப்பு இயல்புதான். நம்மை ஒருவர் தாக்க வரும்போது நம்மை அறியாமலே அதைத் தடுப்போம் இல்லையா... அதுபோலத்தான் இதுவும்.''

'சிலர் சாமி வரும் நேரத்தில் வேறு மொழிகள் பேசுகிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்கிறது?'

''அது வேறுமொழி என்பதெல்லாம் பொய். அது வார்த்தைகளின் கலவைதானே தவிர வேறு எதுவும் இல்லை. தன்னை மறந்த நிலையில் அவர்கள் பேசுவது புதுமொழி மாதிரி தெரிகிறது. அவ்வளவுதான்'' என்கிறார் நப்பின்னை.

அறிவியல் சொல்வது இப்படி இருக்க, பல பக்திப் படங்களில் அம்மனாக நடித்த ரம்யா கிருஷ்ணன் சொல்வது வேறு மாதிரி இருக்கிறது. "எனக்கு சாமி நம்பிக்கை இருக்கு. சாமி படங்களில் நடிக்கும்போது அசைவம் சாப்பிடாமல் இருப்பேன். இது என்னுடைய நம்பிக்கை மட்டும்தான். நான் நடிச்ச அம்மன் படத்தை பார்த்த 80 வயசான பாட்டி ஒருத்தர் என் காலில் விழுந்து, 'என்னை ஆசீர்வாதம் பண்ணு தாயி'ன்னு சொன்னார் எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல. இப்படியெல்லாம் நம்பிக்கை மக்களிடம் இருக்கிறதா என்று ஆச்சரியம்தான் எனக்கு ஏற்பட்டது'' என்கிறார் ரம்யா.

'சாமி வருவது உண்மையா... பொய்யா?' என்று கேட்டால், ''இது அவர்களின் நம்பிக்கை. கடவுள் இருக்கிறார், ஆனால் என் வடிவில் இல்லை என்றுதான் நான் சொல்ல முடியும்'' என்று சிரிக்கிறார் ரம்யா.

சரி, சாமி வரும் பக்தை என்ன சொல்கிறார்? சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த பக்தை விஜயாவுக்குத் திருவிழாவின்போது சாமி வரும் வழக்கம் உண்டு. ''சின்ன வயசுல இருந்தே அதிக பக்தியாக இருந்து வந்தேன். கல்யாணத்திற்குப் பிறகு நிறைய பிரச்னையும் பணக் கஷ்டமும் இருந்தது. அந்த சமயத்தில் எனக்கு உதவ ஆத்தாவைத் தவிர வேறு யாரும் இல்லை. அந்த நிலையில் நான் முழுவதும் அம்மாவையே நினைத்து தரிசித்துவந்தேன். அப்போதான் என்மேல அங்காள பரமேஸ்வரி தாய் வந்தாள். அப்படியே சடையும் போட ஆரம்பித்துவிட்டது. அன்றிலிருந்து எனக்கும் பக்தி அதிகம் ஆகிவிட்டது. என் வாழ்க்கையில் எல்லாமே அவதான். அவ வந்த பிறகுதான் என்னுடைய பிரச்னை எல்லாம் நீங்கி நல்லபடியா இருக்கேன்'' என்கிற விஜயா, தன் வீட்டில் அங்காள பரமேஸ்வரிக்கு தனியாகக் கோயிலும் கட்டி வழிபட்டுவருகிறார்.

இவர்கள் எல்லோரும் சொல்வதிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன. என்றாலும் சாமி வருவது உண்மையா, பொய்யா? இது பக்தியா, மன அழுத்தமா என்பதற்குத் திட்டவட்டமான பதிலை அந்த அம்மன்தான் சொல்ல வேண்டும்.

- ரூபாவதி

படம்: கமல்

0 comments:

Post a Comment