தமிழ் மக்களுக்கு ஆபத்தானது!

Wednesday 26 January 2011

கொடூரப் புலிகளின் பினாமியாக இருந்து, அவர்கள் செய்த வகை தொகையற்ற கொலைகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை, உள்ளூராட்சி தேர்தலைப் பயன்படுத்தி மீண்டுமொரு முறை தமிழ் மக்கள் மத்தியில் தனது அசிங்கமான தலையை நீட்டியுள்ளது. அது தலையை நீட்டியது மட்டுமல்ல, அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தையும் சீர்குலைப்பதற்காக,  தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழ் தரப்பின் பேரம் பேசும் பலத்தை அதிகரித்தல் என்ற வழமையான போலிக் காரணங்களைக் காட்டி உடைத்தெறிந்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய பெரும்பான்மையான கட்சிகளை விட்டு வெளியேறிச் சென்றுமுள்ளன. அதன் மூலம் தமிழ் கட்சிகளின் அரங்கத்தை எப்படியும் உடைத்துவிட வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப்  பொறுத்தவரை அது இதுவரைகாலமும் தமிழ் மக்களுக்கு உருப்படியாக எதனையும் செய்யாத ஒரு அமைப்பாகும். இந்த கூட்டமைப்பு சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் செயல்பட்ட காலத்தில், அன்றைய அரசாங்கம் கொண்டு வந்த ஒற்றையாட்சியை மாற்றிய, சமஸ்டி முறைத் தீர்வான இலங்கையை பிராந்தியங்களின் ஒன்றியமாக மாற்றியமைக்கும் தீர்வை, சிங்கள பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து முறியடித்தவர்கள் ஆவர். அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் எவ்வித தயக்கமோ வெட்கமோ இன்றி அந்தத் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக சிங்கள இனவாத கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியுடனும், ஜே.வி.பியுடனும் ஒரே மேடையில் தோன்றி எதிர்ப்புக் கூட்டங்கள் நடாத்தினார்கள்.

இதுபற்றி அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூட கவலை தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார். அதாவது தனக்கு அன்றைய நிலையில் மேலதிகமாக 10 வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்திருந்தால், அந்த நல்ல தீர்வுத் திட்டத்தை நிறைவேற்றியிருப்பேன் என்று அவர் கூறி வேதனைப்பட்டார். அவருக்கு இல்லாமல் போன அந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்ணியினது என்பதை யாராவது மறுக்க முடியுமா? அவருக்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்பபதில் இருந்த அக்கறை, இந்தக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு இல்லாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை. தாங்கள் ஏன் அன்று தமிழ் மக்களுக்கு வர இருந்த நல்லதொரு தீர்வைக் குழப்பினார்கள் என்பதை, இன்று தமிழ் கூட்டமைப்பினர் பொதுமக்களுக்கு விளக்கவும் இல்லை.

அது ஒருபுறமிருக்க, புலிகள் ஒழுங்கு செய்த கள்ள வாக்குகள் மூலம் 22 பேரை பாராளுமன்றம் அனுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலைக் கண்காணிக்க வந்த ஐரோப்பிய யூனியன் கண்காணிப்புக் குழுவும், உள்ளூர் கண்காணிப்புக் குழுக்களும், தேர்தல் வடக்கு கிழக்கில் பாரியளவில் மோசடியாக நடந்துள்ளது என்று அறிவித்த பின்னரும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகாமல், சிறீலங்கா பாராளுமன்றத்தின் உறுப்பினர் சலுகைகளை அனுபவித்துக் கொண்டே இருந்தனர். இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி இவர்களது தேர்தல் மோசடி குறித்து பல தடவைகள் இடித்துக் காட்டியும் அவர்கள் அசைந்தும் கொடுக்கவில்லை.

இவையெல்லாவற்றையும் விட, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம், புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த படுகொலைகளுக்கெல்லாம் அவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்ததுதான். தங்களது பாராளுமன்றப் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர்கள் எவ்வித மனச்சாட்சியுமின்றி புலிகளின் கொலைகள், சிறுவர்களைக் கடத்தி படையணியில் சேர்த்தல், பொதுமக்களிடம் கப்பம் பெறுதல் போன்ற மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளனர். இவ்வளவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டே, தமிழ் மக்களுக்கு எதிரான இந்த கொடுமைகளுக்கு ஒத்துழைத்து வந்துள்ளனர்.

அவர்களது இந்த ஒத்துழைப்பு, புலிகள் பொதுமக்களை முள்ளிவாய்க்கால் வரை பலவந்தமாக விரட்டிச் சென்று பலிக்கடாக்களாக்கும் வரை தொடர்ந்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுமக்களை விடுவித்து உயிரிழப்பைத் தவிர்க்கும்படி புலிகளை ஒருபோதும் கோரவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. எதிர்காலத்தில் இலங்கை இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் குற்றவாளிகள் ஸ்தானத்தில் வைத்து விசாரிக்கப்படுவது அவசியம். இல்லாதுவிட்டால் அவர்கள் இதே குற்றத்தை மீண்டும் மீண்டும் இழைக்கத் தயங்கமாட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக பாரியளவில் குற்றங்கள் புரிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களை மீண்டும் புத்துயிர்க்க வைக்கும் வகையில், சில தமிழ் கட்சிகள் தமிழ் கட்சிகளின் அரங்கத்திலிருந்து பிரிந்து சென்று அவர்களுடன் தேர்தல் கூட்டு வைத்திருப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. அவர்களை மீண்டும் தலைதூக்க உதவுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்பதை அக்கட்சிகள் உணர வேண்டும்.

கடந்த பொதுத் தேர்தலின் போதும், யாழ்ப்பாணம், வவுனியா மாநகர – நகர சபைகளின் தேர்தல்களின் போதும், மாற்று ஜனநாயக தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மையால்தான் தாம் அதிக ஆசனங்களைப் பெற முடிந்தது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளின் அரங்கத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று போட்டியிட்டால் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்ந்தே, அரங்கத்திலுள்ள சில கட்சிகளை உடைத்து தமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முயன்றுள்ளது.

இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மட்டும் குறை கூறிப் பயனில்லை. ஏனெனில் அதன் நோக்கமே தனது இருப்புக்கு எதிராக எந்தவொரு அணி உருவானாலும் அதை உடைத்தெறிவதுதான். எனவே அது என்ன விதத்திலேனும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதை ஒழிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறியும் இருக்கின்றனர். இந்த விடத்தில் சிந்தித்து செயலாற்றி இருக்க வேணடியவர்கள் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள்தான்.

தமிழ் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள், புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்னர், புலிகளின் கொலை வெறித்தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக, இலங்கை அரசாங்கத்தின் சட்டைப் பொக்கற்றுக்குள் பதுங்கி இருந்தவர்கள்தான். இதை யாரும் மறுத்துவிட முடியாது. அப்பொழுதெல்லாம் இவர்கள் மீது புலிகள் நடாத்தி வந்த கொலைகளை பார்த்து ரசித்தவர்கள்தான் இந்த தமிழ் கூட்டமைப்பினர். இன்று அதே கூட்டமைப்பினரிடம் ஒரு சில உள்ளூராட்சி ஆசனங்களுக்காக சோரம் போவதென்பது, உதைத்த காலை நக்குவதையும் விட கேவலம் இல்லாமல் வேறென்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரே நோக்கம் தனக்கு போட்டியாக எந்தவொரு அரசியல் கட்சியையும் இயங்க விடாமல் அழித்தொழிப்பதும், மீண்டும் புலி அரசியலையும், அதனது அராஜக வேலைப்பாணியையும் கைக்கொள்வதும்தான். அதற்கு அரங்கத்திலுள்ள கட்சிகள் துணை போனால் எதிர்காலச் சந்ததி அவர்களை மன்னிக்காது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ் கட்சிகளும் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்குப் போக வர முடியுதென்றால், அதற்குக் காரணம் மகிந்த ராஜபக்ச அரசு புலிகளை அழித்து அவர்களுக்குப் போட்ட பிச்சை தான்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் உருவாக்கப்பட்டதின் நோக்கமே இன்று பதவியிலுள்ள ஓரளவாவது நீதி நியாயமுள்ள அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காகவே. தேர்தலை மனதில் கொண்டு அக்கூட்டணி அமைக்கப்படவில்லை என்பதை அதன் அங்குரார்ப்பணம் முதல் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வந்துள்ளன. அப்படியிருக்க ஒரு சில கட்சிகள் அதை உடைத்துக் கொண்டு மிகவும் மோசமான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் கூட்டுச் சேருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். தேர்தலில் போட்டியிட தமிழ் அரங்கத்திலுள்ள கட்சிகள் விரும்பியிருந்தால், அவை ஒரு அணியாகப் போட்டியிட முயற்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். அதை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சோரம் போனதின் மூலம், ‘புலிகளின் அராஜகத்தை எதிர்த்தவர்கள் நாங்கள்’ என இதுவரை காலமும் இக்கட்சிகள் பெருமையுடன் சொல்லி வந்த வார்த்தைகள் செல்லாக்காசாகிப் போயுள்ளன. தமிழ் அரங்கக் கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற பெயரே எஞ்சியுள்ளது.

எனவே காலம் தாழ்ந்தாலும் தமது தவறை உணர்ந்து, தமிழ் அரங்கத்தை உடைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் கூட்டுச் சேர்ந்த கட்சிகள், அதிலிருந்து வெளியேறி தமது பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்வதுடன், தமிழ் பொதுமக்களின் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும் என அனைத்த மக்களும் வலியுறுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment