கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம்

Sunday 23 January 2011

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, ஆண்டிப்பட்டி, திண்டுக்கல், சத்திரப்பட்டி, அய்யலூர் ஆகிய இடங்கள் தக்காளி விவசாயத்திற்கு பெயர் பெற்றவை. உடுமலைபேட்டை, பல்லடம், குண்டடம்,
ஜல்லிப்பட்டி ஆகியவை பெரிய வெங்காயத்திற்கும், திருப்பூர், துறையூர், பெரம்பலூர், திண்டுக்கல், வத்தலகுண்டு ஆகியவை சின்ன வெங்காயத்திற்கும், மதுராந்தகம், காஞ்சிபுரம், திண்டிவனம், குடியாத்தம், விழுப்புரம் ஆகியவை கத்தரிக்காய் உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.கும்பகோணம் மற்றும் மணப்பாறை கத்தரிக்காய், பாகற்காய்க்கு பெயர் பெற்றவை. ஊட்டி மற்றும் கொடைக்கானல் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், நூக்கல், பட்டர்பீன்ஸ் உற்பத்திக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.ஒட்டன்சத்திரம் காலி பிளவர்; ஈரோடு சேனைக்கிழங்கு; வேலூர், குடியாத்தம் மற்றும் காட்பாடி சேப்பங்கிழங்கு; தாராபுரம், பெரியகுளம், தேனி மற்றும் ஒட்டன் சத்திரம் முருங்கைக்காய்; விருப்பாச்சி பீட்ரூட், துவரங்குறிச்சி, ஒட்டன் சத்திரம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்கள் மிளகாய் உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.

ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்கள் கீரைகள்; ஊட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்கள் கறிவேப்பிலை உற்பத்திக்கும் பெயர் பெற்றவை. ஒரு காலத்தில், இப்பகுதிகளில் "ஒஹோ' என்றிருந்த விவசாய உற்பத்தி, இன்று ஒடுங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம், இங்கெல்லாம் தற்போது, விளை நிலங்கள் அதிகளவில் வீட்டுமனைகளாக மாறி வருவது தான்.பலர் விளை நிலங்களை மொத்தமாக வாங்கி, முதலீடு செய்து விவசாயம் செய்யாமல் காலியாக வைத்துள்ளனர்.

இருக்கும் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு போதுமான கூலியாட்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பொழுதை கழிக்கவே பல விவசாய கூலிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சில பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவை உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் காய்கறிகள் தேவைக்கு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களையே நம்பி வாழ வேண்டியுள்ளது.

வெங்காயத்திற்கு மகாராஷ்டிரா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றிற்கு அரியானா, டில்லி, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.இதனால், அந்தந்த மாநிலங்களில் உற்பத்திகள் பாதிக்கப்படும் போது, தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கடந்தாண்டு அதிகளவு வெங்காய ஏற்றுமதி செய்யப்பட்டதால், அதன் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிலோ 120 ரூபாய் வரை அதிகரித்தது.பூண்டு விலை கிலோ 300 ரூபாய் வரை உயர்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தி, அரசு மீது திரும்பியுள்ளது.

தமிழகத்தில், காய்கறிகள் உற்பத்தியை அதிகரித்திருந்தால் மட்டுமே, இதுபோன்ற பிரச்னைகளை வரும் காலத்தில் தவிர்க்க முடியும்.சமீபத்தில், விலைவாசி உயர்வை சமாளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அப்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, புதிதாக 25 உழவர் சந்தைகள் திறப்பது, காய்கறி விற்பனை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட 9 திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினாலும், தண்ணீரை போன்று விற்பனை பொருட்களின் தேவைக்கும் வெளி மாநிலங்களிடம் தான், தமிழக அரசு கையேந்த வேண்டிய நிலையுள்ளது.

சிறிய விவசாயிகளுக்கு சலுகை கிடைக்குமா? விவசாய உற்பத்தியை பெருக்க முதற்கட்டமாக சிறிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவு பயிர் கடன்கள் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களை சோம்பேறிகளாக மாற்றி வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு மூடு விழா காண வேண்டும்.இதற்காக, செலவிடப்படும் பணத்தை விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாத உதவித்தொகையாகவும், வைப்பு நிதியாகவும் வழங்கலாம்.அதேபோல, ஈடுபொருள் எனப்படும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை, சிறிய விவசாயிகளுக்கு பாதி விலையில் வழங்கலாம். காலியாக வைத்திருக்கும் நிலத்தை கண்டறிந்து, அதில் விவசாயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்க அதிரடி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

0 comments:

Post a Comment