ஜூலை மாத இறுதிக்குள் கனடா படையினர் யாவரும் கந்தஹார் விமானப் படைத் தளத்தை அல்லது கனடாவை வந்தடைந்து விடுவார்கள்

Monday 24 January 2011

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள கனேடியப் படைகள் அங்கிருந்து ஜூன் மாத நடுப்பகுதி முதல் வெளியேற ஆரம்பிக்கும்.


ஜூலை மாத இறுதிக்குள் கனடா படையினர் யாவரும் கந்தஹார் விமானப் படைத் தளத்தை அல்லது கனடாவை வந்தடைந்து விடுவார்கள் என்று ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள கனேடியப் படைகளின் பிரதம கட்டளையிடும் அதிகாரி லெப்னினன்ட் கேர்ணல் ஹென்றி மைக்கல் சென்லூயிஸ் அறிவித்துள்ளார்.

எனக்கு இது சம்பந்தமான திட்டவட்டமான உத்தரவுகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் இதில் தான் நாம் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக் கிழமை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். 2006 முதல் ஆப்கானிஸ்தானில் மாறிமாறி இருந்து வரும் கனடா இராணுவத்தின் 10 யுத்தப் பிரிவுகளுக்கு இவர் தலைமை தாங்கி வருகின்றார்.

எமது சிப்பாய்கள் மனதிலும் இதே எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவரும் அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றனர், கனடா, அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தென் பிராந்தியக் கட்டளையகம் என்பன இப்போது இது பற்றி விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளன.

கடந்த பல மாதங்களாகவே பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம், என்று அவர் மேலும் கூறினார். ஜூலை மாதத்துக்குள் தனது பணிகளைப் பூர்த்தி செய்யுமாறு கனடாவிடம் ஏற்கனவே வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

கனடா படைகள் தற்போது நிலை கொண்டுள்ள சில இடங்களை ஏப்பிரல் மாதமளவில் அமெரிக்கப்படைகளிடம் ஒப்படைக்க முடியுமா என்பது பற்றி தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

0 comments:

Post a Comment